/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 4ம் இடம்; கோவையில் 180 பள்ளிகள் 100% 'பாஸ்'
/
பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 4ம் இடம்; கோவையில் 180 பள்ளிகள் 100% 'பாஸ்'
பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 4ம் இடம்; கோவையில் 180 பள்ளிகள் 100% 'பாஸ்'
பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 4ம் இடம்; கோவையில் 180 பள்ளிகள் 100% 'பாஸ்'
ADDED : மே 09, 2025 05:40 AM

கோவை : பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாநில அளவில் கோவை மாவட்டம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 180 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், கோவை மாவட்டம் 97.48 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்று, மாநில அளவில் நான்காவது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
கோவை வருவாய் மாவட்டத்தில் மொத்தமாக 1,387 பள்ளிகள் உள்ளன. இதில், கோவை கல்வி மாவட்டத்தில் 114 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 30க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், 17 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 228 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
2024-25 கல்வியாண்டில் 16,135 மாணவர்கள், 18,902 மாணவிகள், 649 தனித்தேர்வர்கள் என மொத்தம் 35,037 பேர் 128 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். கடந்த ஆண்டில் 33,399 பேர் தேர்வெழுதியிருந்த நிலையில், இந்த ஆண்டில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், 34,155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எப்போதும் போலவே, இந்த ஆண்டும் மாநில அளவில் மட்டுமல்லாமல் கோவையிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.55 சதவீதமாக இருக்க, மாணவியர் 98.28 சதவீத விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 34 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், கோவை கல்வி மாவட்டத்தில் மட்டும் 27 ஆயிரத்து 150 பேர் தேர்வெழுதியதில் 26 ஆயிரத்து 527 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 97.71 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
அதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 887 மாணவர்கள் தேர்வெழுதியதில் 7 ஆயிரத்து 628 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 96.72 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 882 மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
2019ல் - 95.01, 2022ல் - 96.91, 2023ல் - 97.57, 2024ல் - 96.97 சதவீதம் என கடந்த ஆண்டுகளில் தேர்ச்சி பதிவாகியது. கடந்த ஆண்டில் 0.6 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 0.51 சதவீதம் அதிகரித்து 97.48 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் ஐந்தாவது முறையாக மாநில அளவில் நான்காவது இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:
கடந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டில் சிறிதளவு உயர்ந்துள்ளது.
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த, தொடர்ந்து பயிற்சிகள் வழங்கியதோடு, மாதிரி தேர்வுகளை நடத்துவதற்காக தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.மாநில அளவில் கோவை மாவட்டம் தொடர்ந்து நான்காவது இடத்தைப் பெற்றது நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எனினும், மேலும் உயர்ந்த தேர்ச்சி விகிதத்தை எதிர்பார்த்திருந்தோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
100% தேர்ச்சி
அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தேர்ச்சி நிலை:
n அரசு பள்ளிகள் - 94.33 சதவீதம்
n மாநகராட்சி பள்ளிகள் - 95.05 சதவீதம்
n நகராட்சி பள்ளிகள் - 96.09 சதவீதம்
n ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் - 100 சதவீதம்
n பழங்குடியினர் நலப்பள்ளிகள் - 93.10 சதவீதம்
n முழு உதவி பெறும் அரசு பள்ளிகள் - 97.54 சதவீதம்
n அரசு உதவிபெறும் பள்ளிகள் - 98.50 சதவீதம்
n தனியார் பள்ளிகள் - 99.10 சதவீதம்
23 அரசு பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் 2 மாநகராட்சி பள்ளிகள் என மாவட்டத்தில் மொத்தம் 180 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
சாதித்த 23 கைதிகள்
கோவை மத்திய சிறைக்கைதிகள் 23 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர்.
கோவை மத்திய சிறையில், இந்தாண்டு, 21 தண்டனை கைதிகள், 2 விசாரணை கைதிகள் என 23 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
23 பேரில், 3 பேர் துணைத்தேர்வு எழுதியவர்கள். இதில் 42 வயதான பாஸ்கர் என்ற கைதி, 600க்கு 448 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். 33 வயதான ஹரிகிருஷ்ணன் என்ற கைதி 430 மதிப்பெண்ணும், 39 வயது துளசி கோவிந்தராஜன், 429 மதிபெண்ணும் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளை சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில் குமார் ஆகியோர் பாராட்டினர்.
கோவை மத்திய சிறை எஸ்.பி., கூறுகையில், ''சிறைக்கைதிகளுக்கு கல்வி கற்றுத்தர ஐந்து ஆசிரியர்கள் சிறைத்துறையில் உள்ளனர். அவர்கள் கைதிகளுக்கு பாடம் கற்பித்து தேர்வு எழுத உதவுகின்றனர். தினசரி இவர்களுக்கு படிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது.
''8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. எழுத, படிக்க தெரியாத கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு எழுத உதவி செய்யப்படுகிறது. இந்த படிப்பு நாளை அவர்கள் வெளியில் செல்லும் போது பயன் உள்ளதாக இருக்கும்,'' என்றார்.