/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹோப் காலேஜில் 52 மீட்டர் நீளத்துக்கு 'ஸ்டீல் டெக்' ; ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரிக்கும் பணி விறுவிறு
/
ஹோப் காலேஜில் 52 மீட்டர் நீளத்துக்கு 'ஸ்டீல் டெக்' ; ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரிக்கும் பணி விறுவிறு
ஹோப் காலேஜில் 52 மீட்டர் நீளத்துக்கு 'ஸ்டீல் டெக்' ; ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரிக்கும் பணி விறுவிறு
ஹோப் காலேஜில் 52 மீட்டர் நீளத்துக்கு 'ஸ்டீல் டெக்' ; ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரிக்கும் பணி விறுவிறு
ADDED : அக் 16, 2024 12:11 AM

கோவை : கோவை - அவிநாசி ரோட்டில் 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டப்படும் புதிய மேம்பாலத்தில், ஹோப் காலேஜ் ரயில்வே தண்டவாளப் பகுதியில், 52 மீட்டர் நீளத்துக்கு 'ஸ்டீல் டெக்' அமைகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில், ரயில்வே துறை மேற்பார்வையில், 'ஸ்டீல் டெக்' தயாராகி வருகிறது; வரும் நவ., மாதம் பொருத்துவதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
கோவை - அவிநாசி ரோட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் (திட்டம்), உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,621 கோடியில், 10.1 கி.மீ., துாரத்துக்கு, 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.
2020, நவ., 21ல் அடிக்கல் நாட்டப்பட்டது; நான்கு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதன்படி, வரும் நவ., மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஒரு மாதம் கூடுதல் அவகாசம் எடுத்து, டிச., மாதத்துக்குள் ஓடுதள பாதையை, முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லட்சுமி மில்ஸ் அருகாமையில் இருந்து, சுகுணா மண்டபம் வரையும், ஹோப் காலேஜ் பகுதியிலும் ஓடுதளம் அமைக்க வேண்டியியிருக்கிறது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே தண்டவாள பகுதியை கடக்க வேண்டியிருப்பதால், 'ஸ்டீல் டெக்' அமைக்கப்படுகிறது.
ஐதராபாத்தில் ஸ்டீல் டெக்
52 மீட்டர் நீளத்துக்கு 'ஸ்டீல் டெக்' தயாரிக்கும் பணி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடந்து வருகிறது. ரயில்வே துறை மேற்பார்வையில் வரும் நவ., மாதம் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
நான்கு இடங்களில் ஏறுதளம், நான்கு இடங்களில் இறங்கு தளம் அமைக்க வேண்டும். வரும் டிச., மாதத்துக்குள் ஓடுதளப் பாதையை முழுமையாகவும், ஐந்து இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கும் பணியை டிச., மாதத்துக்குள் முடிக்கவும், மீதமுள்ள மூன்று ஏறுதளம் மற்றும் இறங்கு தள பணிகளை, 2025 மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், மழை நீர் வடிகால் கட்டுவது; சிறுபாலங்களை அகலப்படுத்துவது; சுரங்கப் பாதைக்கு பதிலாக நடைமேம்பாலம் அமைப்பது; தேவையான இடங்களில் அணுகுசாலை அமைப்பது; நிலம் கையகப்படுத்திய இடங்களை மேம்படுத் துவது, ஓடுதளப் பாதையின் இருபுறமும் கைப்பிடிச் சுவர் கட்டுவது; தார் ரோடு போடுவது; மையத்தடுப்பு அமைத்து, மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது.
இவற்றை செய்து முடிப்பதற்கு, 2025ல் ஜூன் மாதத்தை கடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை, 78 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன. ஹோப் காலேஜ் பகுதியில், 'ஸ்டீல் டெக்' நவ., முதல் வாரம் பொருத்த உள்ளோம்.
இன்னும், 42 துாண்களுக்கு இடையே 'பாக்ஸ் கர்டர்' அமைக்க வேண்டும்; ஒரு மாதத்துக்கு 14 வீதம் மூன்று மாதத்துக்குள் முடிக்கப்படும்.
கட்டுமான பணிகளை, 2025 மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; மழை நீர் வடிகால் கட்டுவதற்கு தோண்டும்போது, ஏராளமான கேபிள்கள் வருகின்றன. அதனால், தாமதம் ஏற்படுகிறது.
அவற்றை சரி செய்து, கட்டி முடிப்பதற்கு சற்று தாமதமாகும். மழை நீர் வடிகாலில் அடைப்பு நீக்க, 10 மீட்டருக்கு ஓரிடத்தில், 'மேனுவல் சிலாப்' அமைக்கப்படுகிறது' என்றனர்.