/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காண்டுகளில் 60 பேர் பலி 'ஷாக்' அடிக்கிறது!காலியிடங்களை நிரப்பாததால் மின்வாரியம் மீது சங்கம் பழி
/
நான்காண்டுகளில் 60 பேர் பலி 'ஷாக்' அடிக்கிறது!காலியிடங்களை நிரப்பாததால் மின்வாரியம் மீது சங்கம் பழி
நான்காண்டுகளில் 60 பேர் பலி 'ஷாக்' அடிக்கிறது!காலியிடங்களை நிரப்பாததால் மின்வாரியம் மீது சங்கம் பழி
நான்காண்டுகளில் 60 பேர் பலி 'ஷாக்' அடிக்கிறது!காலியிடங்களை நிரப்பாததால் மின்வாரியம் மீது சங்கம் பழி
ADDED : செப் 01, 2024 11:02 PM
கோவை:மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை தொடர்கிறது. மின் ஊழியர்கள் சிலர் கடந்த காலங்களில் தொடர்ந்து இறப்பதற்கு காரணம், காலிப்பணியிடங்களை நிரப்பாததே என குற்றஞ்சாட்டுகிறது, மின்வாரிய ஊழியர் சங்கம்.
தமிழக மின்வாரியத்தில், போர்மேன், லைன் மேன், ஒயர்மேன், ஹெல்பர், கேங் மேன் உட்பட 1.50 லட்சம் பணியிடங்கள் உள்ளன. தற்போது, 63 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதனால் பணியில் இருப்பவர்களுக்கு பணிப்பளு அதிகம். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மின்சார துறையில், பல்வேறு பணிகள் 24 மணி நேரமும் இருந்து கொண்டே இருக்கும். மின் கம்பம் பழுது பராமரிப்பு பணிகளில் போதிய பயிற்சி இல்லாத, கேங் மேன் பணியாளர்களை வைத்தே, பெரும்பாலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போதிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
2023- 24ம் ஆண்டு மட்டும், 30க்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இருந்தும், காலியிடங்களை நிரப்ப மறுப்பது ஏன் என, கேள்வி எழுப்புகிறார், மின்வாரிய ஊழியர் சங்கத்தின், மாநில பொது செயலாளர் யுவராஜ்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில், கள உதவியாளர்கள் 24 ஆயிரம் பேர், ஒயர்மேன் 12 ஆயிரம் பேர், மின்பாதை ஆய்வாளர் 1000 பேர் என, 35 ஆயிரம் களப்பணியாளர்களின் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இத்துடன் மொத்தம், 63 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
காலியிடங்கள் அனைத்திலும், கேங் மேன்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவர்களுக்கு கம்பம் எடுத்தல், குழி நடுதல், மின்னோட்டம் இல்லாத விரிவாக்கப்பணி, மரக்கம்பங்களை கொண்டு வருதல் மட்டுமே அடிப்படை பணி.
ஆனால், டெக்னிக்கல் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும் செய்ய கட்டாயப்படுத்துவதால், திடீர் மின் அதிர்ச்சிக்கு உள்ளாகி இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
முன்பு எப்போதும் இல்லாத அளவில், நான்கு ஆண்டுகளில், 60 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும், 30 வயதுக்கு உட்பட்டவர்கள். தகுதியான கேங் மேன்களை கிரேடு உயர்த்தி, உரிய பயிற்சிக்குப் பின் இப்பணிகளை வழங்கினால், உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்.
பெரும்பாலான பணியாளர்கள், தொலைதுாரங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புவதுடன், அந்தந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.