/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டசபை தொகுதிகளுக்கு சென்ற 7,152 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
சட்டசபை தொகுதிகளுக்கு சென்ற 7,152 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
சட்டசபை தொகுதிகளுக்கு சென்ற 7,152 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
சட்டசபை தொகுதிகளுக்கு சென்ற 7,152 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : மார் 21, 2024 07:06 AM

கோவை : கோவை மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று பிரித்து அனுப்பப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்', 7,152 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 4,431 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4,252 'விவி பேட்' இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
கோவை மாவட்டத்தில், 3,077 ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளில், துணை சாவடிகள் அமைக்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதனால், கிணத்துக்கடவு தொகுதியில், 11, சூலுாரில் 3, கோவை வடக்கு மற்றும் தொண்டாமுத்துாரில் தலா 2, சிங்காநல்லுாரில் ஒன்று என, மொத்தம், 19 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதன்படி, மொத்தம், 3,096 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன. இங்கு பயன்படுத்த, 3,719 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,719 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4,026 'விவி பேட்' இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்க ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களான, கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் டி.ஆர்.ஓ., ஷர்மிளா ஆகியோர், 'ஸ்ட்ராங் ரூமில்' இருந்த இயந்திரங்களை, நேற்று பார்வையிட்டு, துவக்கி வைத்தனர்.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'கணினி வழியில் குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, லாரிகளில் அனுப்பப்பட்டன. இவை, அந்தந்த சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' இருப்பு வைக்கப்பட்டு, சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின், 'பேலட் ஷீட்' அச்சிடப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். அதன்பின், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்படும்' என்றனர்.

