/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வ.உ.சி., மைதானத்தில் 78வது சுதந்திர தின விழா
/
கோவை வ.உ.சி., மைதானத்தில் 78வது சுதந்திர தின விழா
ADDED : ஆக 15, 2024 11:58 PM

கோவை வ.உ.சி., மைதானத்தில் 78வது சுதந்திர தின விழா போலீசாரின் பிரத்யேக அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடந்தது.கலெக்டர் கிராந்திகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மூவர்ண பலுான்களை பறக்கவிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.வருவாய், சுகாதாரம், பொதுப்பணி, குடிநீர், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட, 140 அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் பணி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மாநகர போலீசில் சிறப்பாக பணிபுரிந்த, 39 போலீசார், புறநகரில் பணிபுரிந்த 44 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறுவது போன்ற ராணுவ அணிவகுப்பை கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் நிகழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றனர்.
கோவையிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியரின் கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், தேசிய ஒருமைப்பாட்டு நடனம், என சுமார், 700 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பாக கலைநிகழ்ச்சிகளை நடத்திய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கலெக்டர் கிராந்தி குமார் நினைவு பரிசுகளை வழங்கினார்.
இதில் மேற்கு மண்டலம் காவல் துறைத் தலைவர் செந்தில்குமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை டி.ஐ.ஜி.,சரவணசுந்தர், ரூரல் எஸ்.பி.,கார்த்திகேயன், போலீஸ் துணை கமிஷனர்கள் சரவணக்குமார், ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சப் கலெக்டர் கேத்ரின் சரண்யா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)ஸ்வேதா சுமன், உதவி கலெக்டர்(பயிற்சி) அங்கத் குமார் ஜெயின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கயிற்றில் சிக்கிய தேசியக்கொடி
கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வணக்கம் செலுத்தி மரியாதை செய்யும் போது கொடி கம்பத்தில் இருந்த கயிற்றில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வாகனத்திலிருந்த ஏணியின் உதவியோடு தீயணைப்புவீரர்கள் கொடிகம்பத்தில் கயிற்றில் சிக்கியிருந்த கொடியை சரிசெய்து பறக்கவிட்டனர். இதையடுத்து அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்ததோடு மீண்டும்ஒரு முறை தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.

