ADDED : செப் 18, 2026 04:32 AM
கிணத்துக்கடவு: கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில், 100 ஆண்டுகளாக செயல்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை மீண்டும் அமைக்க வேண்டும், பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலத்துக்கு மாற்ற வேண்டும், என, ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக, மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கோவை - திண்டுக்கல் பாசஞ்சர், கோவை - பொள்ளாச்சி பாசஞ்சர், கோவை - தனுஷ்கோடி எக்ஸ்பிரஸ், கோவை - தூத்துக்குடி பாஸ்ட் பாசஞ்சர், திண்டுக்கல் பாசஞ்சர் ரயில்கள் இயங்கின.
கடந்த, 2008ல் அகல ரயில்பாதை பணிகள் துவங்கப்பட்டு, 2017ல் நிறைவடைந்தது. ஆனால், முன்பு இயக்கிய ரயில்களை இயக்காததால், ஏமாற்றமே மிஞ்சியது.
இதே போன்று, செட்டிபாளையம், நல்லட்டிபாளையம், கோவில்பாளையம், திப்பம்பட்டி, பூலாங்கிணறு, கணக்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, பாலகண்ணூத்து, ரெட்டியார் சத்திரம் என, 9 ரயில்வே ஸ்டேஷன்களும், அகலப்பாதையாக மாற்றப்படும் போதும், நிர்வாக காரணங்களினால் மூடப்பட்டன.
அந்த ரயில்வே ஸ்டேஷன்களை மீண்டும் திறக்க வேண்டும். நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ரயில் பயணியர் சங்கத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி - கோவை ரயில் வழித்தடத்தில் மூடப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்கள், ஏற்கனவே இயங்கிய ரயில்கள் மற்றும் புதிய ரயில் சேவைகள் கொண்டுவர, பாலக்காடு, மதுரை, சேலம் ஆகிய மூன்று ரயில்வே கோட்டத்திடம் அனுமதிக்க வேண்டும்.
பாலக்காடு கோட்டத்தால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. எனவே, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து, சேலம் அல்லது மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
