/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
90 டாக்டர்களும் 300 மருத்துவ ஊழியர்களும்
/
90 டாக்டர்களும் 300 மருத்துவ ஊழியர்களும்
ADDED : ஆக 24, 2025 06:49 AM

அன்னூர் : நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 90 டாக்டர்கள், 300 ஊழியர்கள் பணிபுரிந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல் நலனை பரிசோதித்தனர்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம், அன்னூர் அரசு அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
இம்முகாமில் 14 இ.சி.ஜி., கருவிகள், நான்கு எக்கோ கருவிகள், மூன்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள், 10 மினி ஆய்வகங்கள் மற்றும் எக்ஸ்ரே யூனிட் நிறுவப்பட்டிருந்தன.
மருத்துவர்கள் 90 பேர் பங்கேற்றனர். இத்துடன் செவிலியர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 400 பேர் பணிபுரிந்தனர்.
முன்பதிவு செய்யும் இடத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்தனர். முன்பதிவு செய்யும் ஊழியர்கள் வெயில் பாதிக்காதபடி, கொட்டகையில் அமர்ந்து பணிபுரிந்தனர்.
ஆனால் சிகிச்சைக்கு வந்த பெண்கள், முதியோர், கைக்குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வெயிலில் 2 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கானோருக்கு ஏற்ப, முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவில்லை. இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் மையங்களிலும் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர். 1,800 பேர் முகாமில் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.
முகாமுக்கு வந்திருந்த கோவை கலெக்டர் பவன் குமாரிடம், மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது குறித்து தெரிவித்த போது, கூடுதல் கவுன்டர்கள் அமைக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி, இணை இயக்குனர் சுமதி, கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன்...இப்படி இத்தனை பேர் இருந்தும், கலெக்டர் கூறியபடி கூடுதல் கவுன்டர்கள் அமைக்கப்படவில்லை.

