/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாற்றுக்கு 90 சதவீதம் பேர் மெத்தனம் : தொடரும் போக்குவரத்து விதிமீறல்
/
நுாற்றுக்கு 90 சதவீதம் பேர் மெத்தனம் : தொடரும் போக்குவரத்து விதிமீறல்
நுாற்றுக்கு 90 சதவீதம் பேர் மெத்தனம் : தொடரும் போக்குவரத்து விதிமீறல்
நுாற்றுக்கு 90 சதவீதம் பேர் மெத்தனம் : தொடரும் போக்குவரத்து விதிமீறல்
ADDED : நவ 06, 2025 11:18 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர எல்லைக்குள் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களால், தினமும் அவதி ஏற்படுகிறது. போலீசார் உரிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், நாளுக்கு நாள் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் எந்த நேரமும் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.
சில சந்திப்புகளில், ரவுண்டானா அமைத்தும் முறையாக இயக்கப்படாத வாகனங்களால், விபத்து ஏற்படுகிறது.தவிர, வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், 'நோ பார்க்கிங்', 'ஒன்வே' போன்ற விதிமுறைகளை போலீசார் நடைமுறைப்படுத்தினாலும், வாகன ஓட்டுநர்கள் கண்டுகொள்வதில்லை.
தீயணைப்பு நிலையம், வெங்கட்ரமணன் வீதி, நியூ ஸ்கீம் ரோடு, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஒட்டிய சாலைகளில், பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள், விதிகளைப் பொருட்படுத்தாமல், இஷ்டம் போல் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். குறிப்பாக, 'நோ- பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவதும், 'நோ- என்ட்ரி' பகுதியில் நுழைந்தும் விதிமீறுகின்றனர்.
தேர்முட்டியில் ரவுண்டான ஒட்டிய மார்க்கெட் பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், அரசு மருத்துவமனை எதிரே சென்று திரும்ப வேண்டும். அதற்கு மாறாக, உடுமலை நோக்கிய ஒரு வழிப்பாதையில் வாகனங்களை இயக்குவதால் போக்குவரத்து நெரிசலுடன் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பெரும்பாலான உள்ளூர் வாகன ஓட்டுநர்கள், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதில் மெத்தனம் காட்டுகின்றனர். நுாற்றுக்கு 90 சதவீதம் பேர், 'இன்டிக்கேட்டர்' மற்றும் சைகை காட்டாமலேயே, வாகனங்களை திருப்பங்களில் இயக்குகின்றனர். திடீரென வாகனங்களை திருப்புவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அதேபோல, நகரில் உள்ள அனைத்து வழித்தடங்களும் இருவழிப் பாதையாகப் பயன்படுத்துவது வேடிக்கையாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள், விதிகளைப் பின்பற்றுகின்றனரா என போலீசார் முறையாக கண்காணிக்க வேண்டும். விதிமீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, வாகன போக்குவரத்து சீராக இருக்கும். அபராதம் விதிப்பதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

