ADDED : அக் 16, 2026 10:19 PM
கோவை: ம்மாதம் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர். அவர்கள் கூறியது போலவே நேற்று முன்தினம் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்தது; ரோட்டில் மழை நீர் ஓடியது. நேற்று மதியம் ஒரு மணி நேரம் கன மழை கொட்டியது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, சிறுவாணியில் 47 மி.மீ. அடிவாரத்தில் 33 மி.மீ. பதிவானது. 6.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டது. 33.19 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு: பீளமேடு – 61.50, வேளாண் பல்கலை – 21.20, பெ.நா.பாளையம் – 44.20, மேட்டுப்பாளையம் – 52, பில்லுார் அணை – 41, அன்னுார் – 31, கோவை தெற்கு – 38, சூலுார் – 63, வாரப்பட்டி – 32, தொண்டாமுத்துார் – 41, மதுக்கரை – 72, போத்தனுார் – 90.60, பொள்ளாச்சி – 153, மாக்கினாம்பட்டி – 149, ஆனைமலை – 22, ஆழியார் – 41.80, சின்கோனா – 24, சின்ன கல்லார் – 28, வால்பாறை – 18, சோலையார் – 24 மி.மீ. பதிவானது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன், ‘‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, பெங்களூரு அருகில் மேல்நோக்கி நகர்ந்துள்ளதால், இன்றும், நாளையும் கொங்கு மண்டலத்தில் பரவலாக மழை இருக்காது. இருந்தாலும், கொங்கு மண்டல கிழக்கு பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, பாலக்காடு இடைவெளியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காரமடை, தடாகம், பூலுவப்பட்டி, அன்னுாரில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, சிறுவாணி மலைப்பகுதிகள், வால்பாறை மலைப்பகுதிகளில் 21 முதல் 26 வரை வெள்ளப்பெருக்குடன் கூடிய அதீத கனமழை பெய்யக்கூடும்,’’ என்றார்.
