/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதிவு செய்ததோ 960 பேர்; வேலை கிடைத்ததோ 8 பேருக்கு; கிராம சபையில் புகார்
/
பதிவு செய்ததோ 960 பேர்; வேலை கிடைத்ததோ 8 பேருக்கு; கிராம சபையில் புகார்
பதிவு செய்ததோ 960 பேர்; வேலை கிடைத்ததோ 8 பேருக்கு; கிராம சபையில் புகார்
பதிவு செய்ததோ 960 பேர்; வேலை கிடைத்ததோ 8 பேருக்கு; கிராம சபையில் புகார்
ADDED : ஜூலை 12, 2025 01:08 AM
அன்னுார்; 'வேலை கோரி 960 பேர் பதிவு செய்ததில், வெறும் எட்டு பேருக்கு மட்டுமே வேலை தரப்படுகிறது,' என கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், கடந்த 2024 ஏப். 1 முதல் 2025 மார்ச் 31ம் தேதி வரை, செய்யப்பட்ட பணிகளை சமூக தணிக்கை செய்யும் பணி, அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் நடந்தது. பணிகள் களத்தில் அளவீடு செய்யப்பட்டன. வேலை அட்டைகள் ஆய்வு செய்யப்பட்டன. தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வட்டார வள அலுவலர் இம்மானுவேல் பேசுகையில், ''66 லட்சம் ரூபாய் செலவில், 52 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சிலருக்கு கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதை அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும்,'' என்பது உள்ளிட்ட எட்டு ஆட்சேபனைகளை தெரிவித்தார். தொழிலாளர்கள் பேசுகையில், ''960 பேர் வேலைக்கு பதிவு செய்து 100 நாட்களாக காத்திருக்கிறோம். மரக்கன்றுகள் நட தினமும் எட்டு பேருக்கு மட்டுமே வேலை தரப்படுகிறது. அந்த எட்டு பேர் மீண்டும் வேலை செய்ய நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நிதி ஆண்டில் ஒரு நாள் கூட இதுவரை வேலை தரவில்லை. மண் ஏரி அமைக்கும் வேலை தர வேண்டும்,'' என்றனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யமுனாதேவி, பீமன் ஆகியோர், ' உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம்,' என்று சமாதானம் தெரிவித்தனர்.