/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்கல்வியில் சேர்ந்த 98.2 சதவீதம் மாணவர்கள்
/
உயர்கல்வியில் சேர்ந்த 98.2 சதவீதம் மாணவர்கள்
ADDED : ஜூலை 03, 2025 08:54 PM
கோவை; மாவட்டத்தில், 98.2 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் பல்வேறு பிரிவுகளில், சேர்ந்து பயில்கின்றனர். ஒரு சில மாணவர்கள், உயர்கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
தேசிய அளவில், உயர்கல்வி சேர்க்கை விகிதம்(ஜி.இ.ஆர்.,), 28.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் தேசிய விகிதத்தை விட கூடுதலாக, 47 சதவீதமாக உள்ளது.
இதை மேலும் உயர்த்த, 'நான் முதல்வன்' திட்டத்தில், கலெக்டர் தலைமையில் ஆசிரியர்கள், தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட, ஒரு குழு அமைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 2022 - 23 மற்றும், 2023 -- 24 கல்வியாண்டில் பிளஸ்2 படித்த மாணவர்களில், 5,728 மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் இருந்தது கண்டறியப்பட்டது.
உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிளஸ் 2 முடித்ததும், மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதை உறுதி செய்ய உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் அந்தந்த பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கைகளால், நடப்பாண்டு, 98.2 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இன்னும், 174 மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேராமல் உள்ளனர். காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அவர்களில் சாத்தியமுள்ள அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.