/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலையால் வாழ்வாதாரம் பாதிக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் சரமாரி புகார்
/
நான்கு வழிச்சாலையால் வாழ்வாதாரம் பாதிக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் சரமாரி புகார்
நான்கு வழிச்சாலையால் வாழ்வாதாரம் பாதிக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் சரமாரி புகார்
நான்கு வழிச்சாலையால் வாழ்வாதாரம் பாதிக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : டிச 17, 2025 05:13 AM

அன்னூர்: அவிநாசியில், இருந்து அன்னூர், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக அன்னூர் பேரூராட்சி, கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம், பொகலூர் ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்த, நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அன்னூர் பேரூராட்சியில் 114 பேருக்கு நோட்டீஸ் தரப்பட்டது. அவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், அன்னூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. நெடுஞ்சாலைத்துறை (நில எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் வடிவு தலைமை வகித்து பேசினார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தண்டபாணி, செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் பேசுகையில், 'தொழிற்சாலைகள், வர்த்தக அமைப்புகள், லே- அவுட் புரமோட்டர்கள் ஆகியோருக்கு உதவ, நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு பதில் உயர்மட்ட சாலை, சர்வீஸ் சாலையுடன் அமைக்க வேண்டும். நகரை சுற்றி வ ட்டச் சாலை அமைக்க வேண்டும்' என்றனர். பொதுமக்கள் பேசுகையில், 'அவிநாசி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில், தெற்கே கட்டடங்கள் அதிகளவில் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் நேர் எதிரே, நத்தம் புறம்போக்கு காலியிடம் உள்ளது. அங்கு சாலை அமைக்காமல், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களை இடிக்க திட்டமிடுகிறீர்கள். சிலருக்கு அனுப்பிய நோட்டீஸில் பெயரும், புல எண்ணும் தவறாக உள்ளது. சாலை குறித்த முழு விவரம் தெரி யவில்லை. வரைபடம் வெளியிடவில்லை. எவ்வளவு இழப்பீடு தரப்படும் என்று கூறவில்லை. கட்டடங்களின் பாதி அளவு எடுக்கப்பட்டால், மீதி பாதி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மீதி கட்டடத்துக்கும் இழப்பீடு தரப்படுமா, போர்வெல்கள், தென்னை மரங்கள் ஆகியவற்றிற்கு, என்ன இழப்பீடு என்ற விவரம் எதுவும் இல்லை.
அன்னூர் நகரில் கையகப்படுத்துவதால், 1,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அன்னூரின் வடக்கு பகுதியில் உள்ள, இட்டேரி சாலையை பயன்படுத்தலாம். இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.
நில எடுப்பு தாசில்தார் வெங்கடாசலம் பேசுகையில், ''ஆட்சேபனை தெரிவித்த இடத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
கருத்து கேட்பு கூட்டத்தில் தாசில்தார் ஸ்ரீதேவி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

