/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திட்டமிடாமல் ஒரு பாலம்... கடக்கிறது காலம்! உக்கடம் - ஆத்துப்பாலம் பணி முடிய ஏப்ரல் ஆகலாம்
/
திட்டமிடாமல் ஒரு பாலம்... கடக்கிறது காலம்! உக்கடம் - ஆத்துப்பாலம் பணி முடிய ஏப்ரல் ஆகலாம்
திட்டமிடாமல் ஒரு பாலம்... கடக்கிறது காலம்! உக்கடம் - ஆத்துப்பாலம் பணி முடிய ஏப்ரல் ஆகலாம்
திட்டமிடாமல் ஒரு பாலம்... கடக்கிறது காலம்! உக்கடம் - ஆத்துப்பாலம் பணி முடிய ஏப்ரல் ஆகலாம்
ADDED : ஜன 04, 2024 12:33 AM

கோவை : உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலப் பணிகளில், 'டெக் ஸ்லாப்' அமைக்கும் பணி மட்டும் முடிந்திருக்கிறது. கட்டுமான பணியை முழுமையாக முடிக்க இரு மாதங்களாகும்.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. முதலில், உக்கடம் முதல் கரும்புக்கடை வரை மட்டுமே மேம்பாலம் கட்ட திட்டமிட்டு, டெண்டர் கோரப்பட்டது.
'இந்த பாலத்தால் எவ்வித பயனும் இருக்காது; ஆத்துப்பாலத்தை கடக்கும் வகையில் நீட்டிக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மீண்டும் நிதி ஒதுக்கி, நீட்டிக்கப்பட்டது.
ஆமை வேகத்தில் பணிகள்
இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது தான், 'டெக் ஸ்லாப்' அமைக்கும் பணி முடிந்திருக்கிறது. இந்த மேம்பாலத்தில் மூன்று இடங்களில் ஏறு தளம், நான்கு இடங்களில் இறங்கு தளம் அமைக்க வேண்டும்.
இதில், உக்கடம் சில்லரை மீன் மார்க்கெட் அருகில் மட்டும் இறங்கு தளம் முடிந்திருக்கிறது. ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், வாலாங்குளம் சாலைக்குச் செல்ல வேண்டிய இறங்கு தளம்; உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் கடந்து பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோட்டுக்குச் செல்ல வேண்டிய இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏறுதளம்; பொள்ளாச்சி ரோட்டில் வருவோர் குறிச்சி பிரிவை கடந்ததும் பெட்ரோல் பங்க் அருகே ஏறுதளம்; பாலக்காடு ரோட்டில் வருவோர் மயானம் அருகே ஏறுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திட்டமிட்டால் இரண்டே மாதம்
மிகச்சரியாக திட்டமிட்டு, போதிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் நியமித்து, தேவையான கட்டுமான பொருட்கள் சப்ளை செய்தால், ஏறுதளம்/ இறங்கு தளம் கட்டுமான பணியை முடிக்க இரு மாதங்களாகும் என்கின்றனர், கட்டுமானத்துறை வல்லுனர்கள்.
ஆனால், துவக்கம் முதல் சரியான திட்டமிடல் இல்லாததால், தேவையற்ற தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒப்பந்தப்படி, கடந்தாண்டு செப்., மாதம் முடித்திருக்க வேண்டும்; மூன்று மாதம் அவகாசம் அளித்து டிசம்பருக்குள் முடிக்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்; இன்னும் முடிக்காமல் உள்ளனர்.
இம்மாத இறுதிக்குள் இரு வழித்தடத்தை இறுதி செய்து, திறப்பு விழா நடத்த, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதாவது, உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் ஏறு தளம்; ஆத்துப்பாலத்தில் இறங்கு தளம் அமைத்து விட்டால், உக்கடத்தில் இருந்து செல்வோர் ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கலாம்.
இதேபோல், பாலக்காடு ரோட்டில் ஏறு தளம் அமைத்து விட்டால், குனியமுத்துாரில் இருந்து உக்கடம் செல்வோர் பயணிக்கலாம் என நினைக்கின்றனர்.
இதன் மூலம், தரை மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திட்டமிட்டு உள்ளனர்.
லோக்சபா தேர்தல் வர இருப்பதால், அவசரப்பட்டு, அதற்கு முன்னதாக, பயன்பாட்டுக்கு கொண்டு வர, ஆலோசித்து வருகின்றனர்.
அவசரப்பட்டு கட்டி முடித்த திருச்சி மேம்பாலத்தை, திட்டி தீர்க்காதவர்கள் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது!
மேம்பால வேலையை பிப்., மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆறு இடங்களில் ஆறு 'டீம்' வேலை செய்து கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக, உக்கடத்தில் ஏறி பொள்ளாச்சி ரோட்டில் இறங்கும் வகையிலும், ஆத்துப்பாலத்தில் பாலக்காடு ரோட்டில் ஏறி உக்கடத்தில் இறங்கும் வகையிலும் 'ரெடி' செய்து விடுவோம். அது போதுமே. கீழே போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும்.
- - சுந்தரமூர்த்தி,
கோட்ட பொறியாளர் மாநில நெடுஞ்சாலைத்துறை.