/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த நாளத்தை துளைத்த துப்பாக்கி குண்டு! தொழிலாளியை காப்பாற்றிய அரசு மருத்துவமனை
/
ரத்த நாளத்தை துளைத்த துப்பாக்கி குண்டு! தொழிலாளியை காப்பாற்றிய அரசு மருத்துவமனை
ரத்த நாளத்தை துளைத்த துப்பாக்கி குண்டு! தொழிலாளியை காப்பாற்றிய அரசு மருத்துவமனை
ரத்த நாளத்தை துளைத்த துப்பாக்கி குண்டு! தொழிலாளியை காப்பாற்றிய அரசு மருத்துவமனை
ADDED : செப் 22, 2024 03:56 AM

கோவை, : தொழிலாளியின் ரத்த நாளத்தை துளைத்த துப்பாக்கி குண்டை, அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி, அவரது உயிரை காப்பாற்றினர்.
ஈரோடு -அம்மாபேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார், 45, கட்டடத் தொழிலாளி. இவருக்கும் மற்றொரு கட்டடத் தொழிலாளிக்கும் இடையே, மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த கட்டட தொழிலாளி, தனது ஏர்கன் துப்பாக்கியால் செந்தில்குமாரை வலது காலில் சுட்டார்.
இதில், செந்தில்குமார் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தும், ரத்தப்போக்கு நிற்கவில்லை. இதனால், அங்கிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு சி.டி., ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் துப்பாக்கி குண்டு, ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில், ஆழமாக பதிந்திருந்தது கண்டறியப்பட்டது. நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பின், அவருக்கு ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை செய்தனர்.
துப்பாக்கி குண்டால் சேதமடைந்த, ரத்த நாளம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டு, எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக பதிந்திருந்த துப்பாக்கி குண்டை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது செந்தில்குமார் பூரண குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
டீன் நிர்மலா கூறுகையில், “நோயாளியின் காலின் முக்கிய ரத்த நாளத்தில் துப்பாக்கி குண்டு ஒட்டி இருந்ததால் அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது. இது பிரதான ரத்த நாளத்தை துளைத்திருந்தால், மருத்துவமனையை அடைவதற்கு முன், நோயாளி சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏர்கன் கையாள, சட்டப்பூர்வ உரிமம் வைத்திருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்,” என்றார்.
முன்னதாக டீன் நிர்மலா, மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கண்ணதாசன், நோயாளியின் உயிரை வெற்றிகரமாக காப்பாற்றிய ரத்த நாள நிபுணர்கள் டாக்டர் வடிவேலு, டாக்டர் தீபன்குமார், மயக்க மருந்து நிபுணர்கள் பேராசிரியர் டாக்டர் கனகராஜன், சந்திரகலா ஆகியோரை பாராட்டினர்.