/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமையத்தில் வென்ற 1,000 பேர் களம்
/
குறுமையத்தில் வென்ற 1,000 பேர் களம்
ADDED : நவ 21, 2024 09:49 PM

கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று துவங்கிய மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் குறுமைய அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர், 1,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. இதில், பள்ளியில் குறுமைய அளவில் முதலிடம் பிடித்த, 14, 17, 19 வயதுக்குட்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
வரும், 28ம் தேதி வரை கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், இறகுப்பந்து, கேரம், வளையப்பந்து, கோ-கோ உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெறுகின்றன. நேற்று, பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் கால்பந்து, ஹாக்கி போட்டிகளை, கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்தினராஜ், அகடமிக் இயக்குனர் அலமேலு ஆகியோர் துவக்கிவைத்தனர்.
இதில், 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்து போட்டியில், 13 அணிகளும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 12 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஹாக்கி, 19, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
கால்பந்து போட்டியில் சூலுார் அரசுப் பள்ளி, 4-0 என்ற கோல் கணக்கில் தர்மசாஸ்தா பள்ளியை வீழ்த்தியது. ஹாக்கி, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நிர்மல் மாதா பள்ளி, 4-0 என்ற கோல் கணக்கில் கிணத்துக்கடவு அரசுப் பள்ளியை வென்றது.
இந்துஸ்தான் பள்ளி, 3-0 என்ற கோல் கணக்கில் சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன. அதேபோல், கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடந்துவருகின்றன.
பல்வேறு சுற்றுக்களை அடுத்து, 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 'பால் பேட்மின்டன்' முதல் அரையிறுதியில் ஜி.ஆர்.என்.எம்., மேல்நிலை பள்ளி அணி, 35-1, 35-6 என்ற புள்ளி கணக்கில் புனித ஏன்ஸ் பள்ளி அணியை வென்றது.
தொடர்ந்து, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணி, 35-31, 35-17 என்ற புள்ளி கணக்கில் நேஷனல் பள்ளி அணியை வென்றது. பெண்கள் கபடி போட்டியில், சி.ஜி., பள்ளி அணி, 36-8 என்ற புள்ளி கணக்கில் கீர்த்திமான் பள்ளியை வென்றது.
பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி, 25-5 என்ற புள்ளி கணக்கில் வி.ஜி.என்., பள்ளியையும், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி அணி, 31-0 என்ற புள்ளி கணக்கில் கிணத்துக்கடவு அரசு பள்ளி அணியையும் வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.