/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நல்ல புத்தகம் புதிய சிந்தனைகளை தரும்'
/
'நல்ல புத்தகம் புதிய சிந்தனைகளை தரும்'
ADDED : செப் 24, 2024 11:54 PM

சூலுார் : முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' எனும் மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
'வெற்றி சிந்தனைகள்' என்ற தலைப்பில், சிந்தனை கவிஞர் கவிதாசன் பேசியதாவது:
நம்மில் சிலர், பிறந்து விட்டோமே என்று வாழ்ந்து வருகின்றனர். அப்படி இல்லாமல் வாழ்ந்து காட்டினோம் என்ற முத்திரையை பதிக்க வேண்டும். வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொள்கிறோம். ஒரு மரத்தில் கிளைகள், பூக்கள், பழங்கள் இருக்கும். நாளடைவில், பூக்கள், பழங்கள் பறிக்கப்படும். ஆனால், மரத்தின் வேர் அப்படியே இருக்கும். பூ, பழம் போல் தொழில்நுட்பம். இன்று இருக்கும் நாளை இருக்காது. ஆனால், நமது பண்பாடு வேர் போல, என்றும் இருக்கும்.
இதுவரை எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. இனிமேல் எப்படி வாழப்போகிறோம் என்பது முக்கியம். நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுப்பவரே குரு. உலகத்தை மாற்ற விரும்புவதை விட, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு செயலுக்கும், திருப்தி, பரம திருப்தி, அதிருப்தி, அபாயம் எனும் நான்கு எதிர்வினைகள் உண்டு. அதன்படியே வாழ்க்கை இருக்கும். எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நல்ல புத்தகங்களை படியுங்கள். தினமும் ஒரு வார்த்தை தான் படிக்கமுடியும் என்றால் ஆத்திச்சூடி படியுங்கள்.
அதை விட அதிகம் படிக்க முடியும் என்றால் திருக்குறளை படியுங்கள். அவை உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, புதிய சிந்தனைகளை தரும்.
இவ்வாறு, அவர் பேசினார்.