/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்கனாங்கொம்பில் நடமாடும் ரேஷன் கடை
/
வாக்கனாங்கொம்பில் நடமாடும் ரேஷன் கடை
ADDED : பிப் 22, 2024 04:50 AM

அன்னுார்: கடந்த 20 ஆண்டுகள் கோரிக்கையை அடுத்து, வாக்கனாங்கொம்பில் நடமாடும் ரேஷன் கடை துவக்கி வைக்கப்பட்டது.
அக்கரை செங்கப்பள்ளியில் முழு நேர ரேஷன் கடை உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் வாக்கனாங்கொம்பில், 200 குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க, பொதுமக்கள், 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், சொந்தக் கட்டடம் இல்லாதது, ஊழியர் பற்றாக்குறை உட்பட காரணங்களால் துவக்கப்படவில்லை. அதற்கு பதில் நடமாடும் ரேஷன் கடை நேற்றுமுன்தினம் துவக்கி வைக்கப்பட்டது. நீலகிரி எம்.பி., ராஜா, நடமாடும் ரேஷன் கடையை துவக்கி வைத்து, ரேஷன் பொருட்கள் வழங்கினார்.
குடிமை பொருள் தாசில்தார் செல்வி கூறுகையில், ''புதன்கிழமை, வாக்கனாங்கொம்பில் நடமாடும் ரேஷன் கடை வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்,'' என்றார்.
மேட்டுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயல் ஆட்சியர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.