பல்முனை விளையாட்டு மைதானம் வேணும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அமைக்கணும்
பல்முனை விளையாட்டு மைதானம் வேணும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அமைக்கணும்
UPDATED : ஜன 26, 2026 05:44 AM
ADDED : ஜன 26, 2026 05:41 AM

மாநகராட்சி மேற்கு மண்டலம் 71வது வார்டானது ஆர்.எஸ்.புரம், கவுலிபிரவுன் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பூ மார்க்கெட் கிழக்கு, லாலி ரோடு-தடாகம் ரோடு ஒரு பகுதி, டி.வி., சாமி ரோடு, பாஷ்யகாரலு ரோடு உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது.
வி.ஐ.பி.க்கள் குடியிருப்பு, ஷோரூம்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் கொண்ட இப்பகுதியில், பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். பூ மார்க்கெட் மேற்கு பகுதியில் நடுத்தர மக்கள், மூங்கில் சார்ந்த தொழில் செய்பவர்கள் ஓரளவு வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில் குறுகிய ரோடுகள் அதிகம். பூ மார்க்கெட் உள்ளதால் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம். இப்பகுதியில் உள்ள சாஸ்திரி மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் பிரதான கோரிக்கை.
பாதுகாப்பு கேள்விக்குறி!
காமராஜர் நகரில் இருந்து இரண்டு கி.மீ., கடந்துவந்து, சாஸ்திரி மைதானத்தை பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத்தர வேண்டும். வரும் வழியில் ஆர்.எஸ்.புரம், சுப்ரமணியம் வீதியில் புதிதாக போடப்பட்ட தார் ரோட்டில் கற்கள் பெயர்ந்து வந்துள்ளன. அந்த அளவுக்கு ரோட்டின் தரம் இருக்கிறது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி(மேற்கு) காம்பவுண்ட் சுவர் ஒட்டி இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இருட்டாக இருப்பதால் பயமாக உள்ளது. பள்ளி அருகே இப்படி நடப்பது மாணவர்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
-ராகவன் பள்ளி மாணவர்
விளையாட்டுக்கு மட்டுமே
ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம்தான் இங்குள்ளவர்களுக்கு உதவியாக உள்ளது. வார இறுதி நாட்களில், 30க்கும் மேற்பட்ட அணிகள் கிரிக்கெட் விளையாடுகின்றன. இடம் கிடைக்காமல் ஆங்காங்கே 'பிட்ச்' அமைக்கின்றனர். கழிவறை வசதி இல்லாததால் கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். போதாக்குறைக்கு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் மாதக்கணக்கில் இங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து மற்றவர்களும் உள்ளே 'பார்க்கிங்' ஆக பயன்படுத்துகின்றனர். விடுமுறையில் இந்த மைதானத்தில் கண்காட்சி, தீபாவளி சமயத்தில் பட்டாசு கடைகளை போடுகின்றனர். இந்த மைதானத்தை மேம்படுத்தி முழுவதும் விளையாட்டுக்கு பயன்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிரஞ்சீவி தனியார் நிறுவன ஊழியர்
தாமதமின்றி தீர்வு
வெங்கடாசலம் வீதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம், மோசமான நிலையில் பயன்பாடின்றி உள்ளது. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம். இந்த வார்டில் சில இடங்களில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. எஸ்.ஆர்.பி., பள்ளி அருகே தெரு விளக்குகள் சில சமயங்களில் எரிவதில்லை. அதிகாலையிலும், இரவு நேரத்திலும் நடைபயிற்சி செல்பவர்கள் இங்கு அதிகம். எனவே, தெரு விளக்கு பிரச்னைகளுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும்.
-மணிவண்ணன் அரசு ஊழியர்.
