/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க! கால்நடை மருந்தகங்களில் பதிவு தீவிரம்
/
ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க! கால்நடை மருந்தகங்களில் பதிவு தீவிரம்
ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க! கால்நடை மருந்தகங்களில் பதிவு தீவிரம்
ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க! கால்நடை மருந்தகங்களில் பதிவு தீவிரம்
ADDED : ஆக 11, 2025 09:02 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்டத்தில், ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பகுதியிலும், தலா ஒரு ஆடு வளர்ப்போர், கோழி வளர்ப்போர் சங்கம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பலர், பால் உற்பத்திக்காக மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, இறைச்சிக்காக ஆடு மற்றும் கோழி வளர்க்கப்படுகிறது.
குறிப்பாக, 118 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில், பெரும்பாலான கிராமங்களில் செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, பொள்ளாச்சி கோட்டத்தில், புதிதாக, கால்நடைத்துறை வாயிலாக ஆடு மற்றும் கோழி வளர்ப்போருக்கு தனித்தனியாக சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்தில், 39 கால்நடை மருந்தகங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மருந்தகத்துக்கும் உட்பட்ட பகுதியிலும், தலா ஒரு ஆடு வளர்ப்போர் சங்கம் மற்றும் கோழி வளர்ப்போர் சங்கம் ஏற்படுத்தப்படவும் உள்ளது.
இவ்வாறு, சங்கம் அமைப்பதன் வாயிலாக, ஆடு மற்றும் கோழி வளர்ப்போர், தங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அரசு திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை எளிதாக பெற முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட பகுதியிலும், ஆடு மற்றும் கோழி வளர்ப்போருக்கு என, தனித்தனியே ஒரு சங்கம் ஏற்படுத்தப்படும். இதற்கு, கால்நடை உதவி டாக்டர்கள், நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த கால்நடை மருந்தகத்தின் வாயிலாக தங்களது பதிவை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு சங்கத்தில், 25க்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக் கொள்ளப்படும்.
சங்கம் உருவாக்கப்படும்போது, ஆடு மற்றும் கோழி வளர்ப்போர், தங்களது தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும், அரசின் திட்டங்கள், சேவைகள், கடன் உதவி உள்ளிட்டவைகளை எளிதாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இத்திட்டம் வாயிலாக, ஆடு, மற்றும் கோழி வளர்ப்போரிடையே, ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு உதவிகள் கிடைக்கும் என்பதால், பதிவு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

