UPDATED : நவ 18, 2026 08:27 PM
ADDED : நவ 18, 2026 08:25 PM
கோவை: மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க, ‘புதிய தொடக்கம்’ என்ற சிறப்பு வழிகாட்டுதல் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது.
பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்கான காரணங்களை கண்டறிந்து, மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் தேவையான உதவிகளை வழங்கி மீண்டும் கல்வியை தொடர செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இதற்காக, துறைவாரியாக நோடல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று சிறப்பு முகாம்கள் நடந்தன.
சரவணம்பட்டி முகாமில், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் பள்ளிக்கு செல்லாத 160 மாணவர்களில், 43 மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
இதில், படிப்பில் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற 17 மாணவர்கள் வெள்ளானைப்பட்டி, ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
குனியமுத்தூர் முகாமில், பேரூர் வட்டாரத்தில் கண்டறியப்பட்ட 119 மாணவர்களில், 12 பேர் அரசு பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இதேபோல், மற்ற வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
