/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்; அழகு செடிகளால் மிளிரும் 'பொள்ளாச்சி'
/
புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்; அழகு செடிகளால் மிளிரும் 'பொள்ளாச்சி'
புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்; அழகு செடிகளால் மிளிரும் 'பொள்ளாச்சி'
புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்; அழகு செடிகளால் மிளிரும் 'பொள்ளாச்சி'
ADDED : நவ 21, 2025 06:18 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் புதுப்பிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அழகுசெடிகளை கொண்டு, 'பொள்ளாச்சி' என எழுதப்பட்டுள்ளது பயணியரை கவரும் வகையில் உள்ளது.
மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலைநோக்குப் பார்வையில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், பயணியருக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. அதில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா, 15 சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு, பணிகள் நடக்கிறது.
அதில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வாகன நிறுத்தப்பகுதிகளில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. முகப்பு பகுதி முழுவதுமாக சீரமைக்கப்படுகிறது.
மேலும், முகப்பு பகுதியில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு அங்கு பூங்கா, அழகிய மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. தேசியக்கொடி கம்பம் பொருத்தப்பட்டுள்ளன. முகப்பு பகுதி முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, பொள்ளாச்சி ஜங்ஷன் என தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
வாகன நிறுத்தப்பகுதி புதியதாக அமைக்கப்பட்ட இடத்தில், நிழற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, விழாக்கள் நடத்த ஏதுவாக வாடகைக்கு ஹால் வசதி ஏற்படுத்துப்பட்டுள்ளது. பயணியர் காத்திருப்பு பகுதியில், 'ஏசி' அறையும் அமைக்கப்பட்டுள்ளன.ஸ்டேஷனின் முகப்பு பகுதியில் இருந்த விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆர்ச் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பார்வையை கவருகிறது! ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணியர் வெளியேறும் பகுதி அருகே, அழகு செடிகளை கொண்டு, ஆங்கிலத்தில் 'பொள்ளாச்சி' என எழுதப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. ரயில்வே ஸ்டேஷன் வளாகம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு பார்வையை கவரும் வகையில் அமைந்துள்ளது.
90 சதவீதம் நிறைவு மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இது குறித்து தற்போதைய நிலவரத்தை மத்திய ரயில்வே துறையின் அதிகாரபூர்வ சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன, என குறிப்பிடப்பட்டுள்ளது.

