/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் தேவை
/
நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் தேவை
ADDED : ஜன 30, 2024 10:31 PM

பெ.நா.பாளையம்;நாள் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை நிறைவு செய்ய ஜல் ஜீவன் திட்டம் அமலாக்கப்படுகிறது என, பயிற்சி வகுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அருணா நகர் சமுதாய கூடத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலர், கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு, பானி சமிதி உறுப்பினர்களுக்கான ஜல்ஜீவன் மிஷன் தொடர்பான திறன் வளர்ப்பு வெளியிட பயிற்சி நடந்தது.
இதில், பயிற்றுனர் சச்சிதானந்தம் பேசுகையில், கிராம ஊராட்சிகளில் மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக தீர்க்கும் அமைப்பே ஜல்ஜீவன் மிஷன் எனப்படுகிறது. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் வசிக்கும், ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு, 55 லிட்டர் தண்ணீர் தேவை.
அதை நிறைவு செய்ய மத்திய அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊராட்சியில் வசிக்கும் மக்களின் தண்ணீர் தேவை எவ்வளவு என்பதை அறிந்து, பற்றாக்குறை தண்ணீரை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு, இத்திட்டத்தின் வாயிலாக தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். பொது மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
ஒவ்வொரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தும் போது அடுத்த, 30 ஆண்டுகளுக்கு மக்களின் தேவை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கு, எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
ஜல்ஜீவன் மிஷன் திட்டம் முழுக்க, முழுக்க மக்களுக்கான திட்டம். இதை மக்களுக்காக மத்திய அரசு இலவசமாக செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின்படி நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும், குடிநீர் இணைப்பு பெற உரிமை உள்ளது என்றார்.
பயிற்சி வகுப்பில், வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, அசோகபுரம், குருடம்பாளையம், பிளிச்சி, நாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த துணைத் தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்டனர்.