/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் முகாமை ரூ.5 கோடியில் மேம்படுத்த திட்டம்!
/
யானைகள் முகாமை ரூ.5 கோடியில் மேம்படுத்த திட்டம்!
ADDED : ஜன 19, 2024 11:46 PM

பொள்ளாச்சி:ஆனைமலை அருகே, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில், ஐந்து கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில், கடந்த, 1850-ம் ஆண்டு வனத்துறை உபயோகத்துக்கு யானைப்படை உருவாக்கப்பட்டது. அதன் பின், 1874-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், யானைகளை பிடிப்பது தொடங்கப்பட்டது.
கடந்த, 1889ம் ஆண்டு யானைகள் பிடிக்க, குழிகள் வெட்டி யானைகள் பிடிக்கப்பட்டன. அவற்றுக்கு பயிற்சி அளித்து, மரங்கள் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு வனத்துறைபணிக்கு பயன்படுத்தப்பட்டன.
நாடு சுதந்திரத்துக்கு பின், கடந்த, 1956ம் ஆண்டு வரகளியாறு யானைகள் முகாம் துவங்கப்பட்டன. கடந்த, 1972ம் ஆண்டு யானைகள் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 1972 - -75-ல் யானை கூட்டத்தை கட்டுப்படுத்தும் முறையாக மாற்றப்பட்டது.கடந்த, 1975ல் இருந்து யானைகள் முகாம், பயிற்சி மற்றும் யானை பாதுகாப்பு மையமாக செயல்பட்டு வருகிறது.
கோழிகமுத்தி, வரகளியாறு யானை முகாம்களில், தற்போது, மொத்தம், 27 யானைகள் பயிற்சி அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. யானைகளின் வயது, எடை மற்றும் செயலுக்கு தகுந்தவாறு கால்நடை டாக்டரின் பரிந்துரையின்படி உணவு வழங்கப்படுகிறது.
கும்கி பயிற்சி
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல் அல்லது பிடிக்கும் பணியில் முகாம் யானைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. அவற்றை எவ்வாறு பிடிப்பது, லாரியில் ஏற்றுவது குறித்து வளர்ப்பு யானைகளுக்குகும்கி யானைகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தரையில் விரிக்கப்பட்ட கயிற்றின் மீது நடந்து செல்லுதல், கயிற்றை பிடித்து இழுத்தல், மரக்கட்டையை காலால் எட்டி உதைத்தல் உள்பட பல்வேறு வகையான பயிற்சி அளித்து கும்கியாக மாற்றப்படுகிறது. வளர்ப்பு யானைகளுக்கு, தினமும் அரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். மற்ற நேரங்களில் வனப்பகுதியில் ரோந்து செல்ல பயன்படுத்தப்படுகின்றன.
சமீப காலமாக யானைகள் முகாமினை காண, சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கோழிகமுத்தி யானைகள் முகாம், சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இங்கு சுற்றுலா பயணியர், வளர்ப்பு யானைகளை காண அதிகளவு வருகின்றனர்.
முகாமினை காண வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்காக கட்டணம், ஒரு நபருக்கு, 236 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இங்கு, ஆண்டுதோறும் யானை பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மேம்படுத்த திட்டம்
டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாம், ஐ.எஸ்.ஓ., 9001 சான்றிதழ் கடந்த, 2015ம் ஆண்டு பெற்றுள்ளது.சிறப்பு பெற்ற கோழிகமுத்தி முகாமில் போதிய வசதிகளை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.
அதில், யானைகளுக்கான சிகிச்சை மையம், வாகனங்கள் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
விரைவில் டெண்டர்
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம் கூறியதாவது:
டாப்சிலிப், கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில், ஐந்து கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், பார்வையாளர்கள் அரங்கம், கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், யானைகளுக்கான சிகிச்சை மையம், கால்நடைத்துறை டாக்டருக்காக அலுவலகம் அமைக்கப்படுகிறது.
யானைகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம் மேம்படுத்தப்படுகிறது. யானைகள் குளிப்பதற்காக செக்டேம் கட்டுதல், பயிற்சி அளிக்கும் கரோல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.