/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரப்பாலம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.102.5 கோடிக்கு கருத்துரு
/
மரப்பாலம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.102.5 கோடிக்கு கருத்துரு
மரப்பாலம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.102.5 கோடிக்கு கருத்துரு
மரப்பாலம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.102.5 கோடிக்கு கருத்துரு
ADDED : ஏப் 09, 2025 10:45 PM
கோவை; மதுக்கரை மரப்பாலத்தில் ரயில்வே தரப்பில் பாக்ஸ் பாலம் அமைத்த பின், சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, அகலப்படுத்தி, 800 மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்க, ரூ.102.5 கோடிக்கு நிர்வாக அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) கருத்துரு அனுப்பியுள்ளது. கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில், மதுக்கரையில் உள்ள மரப்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் குறுகிய சுரங்கப்பாதை என்பதால், ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே கடந்து செல்ல முடிகிறது.
ஒரு மார்க்கமாக வாகனங்கள் வரிசையாக சென்றால், எதிர் திசையில் வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. அதனால், நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதில், மரப்பாலம் ரயில்வே சுரப்பாதை பகுதியில், 82.7 மீட்டர் நீளம், 21.9 மீட்டர் அகலத்துக்கு 'கான்கிரீட் பாக்ஸ்' முறையில் நான்கு வழிச்சாலையாக சுரங்கப்பாதையை விஸ்தரிக்கும் பணியை, பாலக்காடு ரயில்வே கோட்டம் மேற்கொள்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அதிகாரிகள் கூறியதாவது:
மரப்பாலத்தில் ரயில்வே பணி துவங்க இருக்கிறது. ஒரே ஒரு நாள் மாற்று வழித்தடத்தில் வாகனங்களை இயக்கிப் பார்த்தோம்.
என்னென்ன பிரச்னை வந்தது என்பதை ஆய்வு செய்து, தீர்வு ஏற்படுத்தி வருகிறோம். வாகனங்களை மாற்றுவழித்தடத்தில் அனுப்பி விட்டு, மற்ற வேலைகள் செய்யப்படும். மரப்பாலத்தின் இரு புறமும் நிலம் கையகப்படுத்தி, அகலப்படுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை செய்ய உள்ளது. மொத்தம், 16.2 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழிச்சாலையாக அமையும்.
தலா, 7.5 மீட்டர் வீதம் இருபுறமும் சாலை, மையத்தில், 1.2 மீட்டர் மையத்தடுப்பு அமைக்கப்படும். சர்வீஸ் ரோடு, தலா 5.5 மீட்டர் அகலத்தில் அமையும். அருகாமையில், மழை நீர் வடிகால் கட்டப்படும்.
மொத்தம் 800 மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை உருவாக்க, 'டிசைன்' தயாரித்து வருகிறோம். உத்தேசமாக, ரூ.102.5 கோடி தேவைப்படுமென, மதிப்பீடு தயாரித்துள்ளோம். தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு, கருத்துரு அனுப்பியிருக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

