/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் வீணாகும் குடிநீர் சீரமைக்க வேண்டுகோள்
/
ரோட்டில் வீணாகும் குடிநீர் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : மார் 17, 2024 11:43 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதுார் அருகே உள்ள, தனியார் பெட்ரோல் பங்க் முன், குழாயில் கசிவு ஏற்பட்டு ரோட்டில் குடிநீர் வீணாகிறது.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை, கிணத்துக்கடவு செல்லும் சர்வீஸ் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த ரோட்டில், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாய் உள்ளது. கல்லாங்காட்டுப்புதுார் அருகே, தனியார் பெட்ரோல் பங்க் முன்பாக, கடந்த மூன்று மாதங்களாக, குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சர்வீஸ் ரோட்டில் குடிநீர் வழிந்தோடுகிறது. இதனால், ரோடும் சேதமடைந்து வருகிறது. இதை காணும் அப்பகுதி மக்கள் வேதனையடைகின்றனர்.
ரோட்டில் பஸ் மற்றும் பிற வாகனங்கள் வேகமாக செல்வதால், குழியில் தேங்கியிருக்கும் தண்ணீரால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், பைக் ஓட்டுனர்கள் செல்லும் போது குழி இருப்பது தெரியாமல் தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
அவ்வப்போது, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், குழாய் உடைப்பு பெரிதாவதற்குள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும், தமிழக அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

