ADDED : மார் 14, 2026 06:41 AM

போத்தனூர்: குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் செல்லும் பிரதான சாலையின் இடதுபுறம், புதிய பாதாள சாக்கடையின் பிரதான குழாய் செல்கிறது. நேற்று மாலை இக்குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் அதிக அழுத்தத்துடன் வெளியேறியது.
அப்போது அவ்வழியே இரும்பு தளவாடங்ளுடன் வந்த மினி டிப்பர் லாரி உடைப்பு ஏற்பட்ட குழியில் சிக்கி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் தப்பினார்.
கழிவுநீர் அருகேயிருந்த கடைகளில் புகுந்ததுடன், பல மீட்டர் தூரம் சாலையில் வழிந்தோடியது. அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது. அவ்வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு பின் தளவாடங்கள் அகற்றப்பட்ட பின் மினி டிப்பர் லாரி, கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணியை துவக்கினர்.
உதவி இன்ஜி., ஒருவர் கூறுகையில், 'பேக் பிரஷரால் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறியுள்ளது. இன்று (நேற்று) இரவுக்குள் சீரமைப்பு பணி முடிக்கப்படும்' என்றார்.
