/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் கொண்டு வர பவானி ஆற்றில் தனிப்பாலம்
/
குடிநீர் குழாய் கொண்டு வர பவானி ஆற்றில் தனிப்பாலம்
குடிநீர் குழாய் கொண்டு வர பவானி ஆற்றில் தனிப்பாலம்
குடிநீர் குழாய் கொண்டு வர பவானி ஆற்றில் தனிப்பாலம்
ADDED : ஜூன் 15, 2025 10:18 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, விளாமரத்தூர் குடிநீர் திட்ட குழாயை கொண்டுவர, பவானி ஆற்றில் பாலம் கட்ட, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, 22.20 கோடி ரூபாய் செலவில், நெல்லித்துறை அருகே, விளாமரத்தூரிலிருந்து குடிநீர் திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நெல்லித்துறை கிராமத்திலும், பவானி ஆற்றுப் பாலத்தின் மீதும், இன்னும் குழாய் பதிக்கவில்லை. இந்த இரண்டு இடங்களில் குழாய்கள் பதிக்கும் போது, நெல்லித்துறை கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பவானி ஆற்று பாலத்தின் மீது குடிநீர் குழாய் கொண்டு சென்றால், அழுத்தம் காரணமாக பாலத்துக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தனியாக பாலம் அமைத்து, அதில் குழாய் பதிக்கும்படி கூறினர். இதற்கு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் அனுமதி பெற்ற பின்புதான், பாலம் அமைக்க முடியும், என்றார்.
இதை அடுத்து, பவானி ஆற்றின் குறுக்கே, குடிநீர் குழாய் கொண்டுவர, பாலம் அமைப்பதற்கான தீர்மானம், மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் விளாமரத்தூரில் இருந்து சாமண்ணா தலைமை நீரேற்று நிலையம் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
600 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய், பவானி ஆற்றின் குறுக்கே கொண்டு வருவதற்கு, 160 மீட்டர் நீளத்திற்கு, ஆற்றின் குறுக்கே தனியாக பாலம் அமைக்க வேண்டியுள்ளது. இப்பணிக்கான மதிப்பீடு தயாரிக்கவும், மண் பரிசோதனை, கட்டட கட்டமைப்பு மதிப்பீடு தயாரிக்க, பொறியியல் ஆலோசகர் நியமனம் செய்ய, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனால் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, விளாமரத்தூரில் இருந்து குடிநீர் குழாய் கொண்டு வருவதற்கு, வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் குறுக்கே, விரைவில் பாலம் கட்டப்பட உள்ளது.