ADDED : பிப் 11, 2026 09:49 AM

வால்பாறை: பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் உலா வரும் ஒற்றை யானையால், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, அய்யர்பாடி, மயிலாடும்பாறை, உருளிக்கல், குரங்குமுடி, சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
வால்பாறையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து வெயில் மற்றும் பனி மூட்டம் நிலவுகிறது. தற்போது, பன்னிமேடு, மயிலாடும்பாறை, மளுக்கப்பாறை வழியாக கேரளா வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயரத்துவங்கியுள்ளன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா, குரங்குமுடி, சிவா காப்பி, புதுத்தோட்டம் உள்ளிட்ட எஸ்டேட்களில் பகல் நேரத்தில் தேயிலை காட்டில் உலா வரும் ஒற்றை யானையால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டாலும், இவை தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதில்லை. ஒற்றை யானை மட்டும் பகல் நேரத்தில் உணவு மற்றும் குடிநீருக்காக தேயிலை காட்டிலும், ரோட்டிலும் முகாமிடுகிறது.
யானை முகாமிட்டுள்ள பகுதியில், அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. முகாமிடும் யானையை கூச்சலிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. சிறிது நேரத்திற்கு பின் அதுவாக வனப்பகுதிக்குள் சென்று விடும். தேவையில்லாமல் யானையின் அருகில் சென்று, விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு, கூறினர்.
