/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகருக்குள் வாகனங்கள் தவிப்பதை தவிர்க்க தெற்கு புறவழிச்சாலை தேவை! அரசுக்கு அழுத்தம் தர தயாராகும் அமைப்புகள்
/
நகருக்குள் வாகனங்கள் தவிப்பதை தவிர்க்க தெற்கு புறவழிச்சாலை தேவை! அரசுக்கு அழுத்தம் தர தயாராகும் அமைப்புகள்
நகருக்குள் வாகனங்கள் தவிப்பதை தவிர்க்க தெற்கு புறவழிச்சாலை தேவை! அரசுக்கு அழுத்தம் தர தயாராகும் அமைப்புகள்
நகருக்குள் வாகனங்கள் தவிப்பதை தவிர்க்க தெற்கு புறவழிச்சாலை தேவை! அரசுக்கு அழுத்தம் தர தயாராகும் அமைப்புகள்
ADDED : செப் 05, 2025 10:19 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி - வால்பாறை செல்லும் சுற்றுலாப்பயணியர் வசதிக்காக, நிரந்தர மாற்றுப்பாதை அல்லது தெற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என அரசுக்கு தொழில் வர்த்தக சபை மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி - வால்பாறை ரோடு மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆழியாறு அணையில் இருந்து, மொத்தம், 40 கி.மீ.,க்கு கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாக அமைந்துள்ளது.
ஆழியாறு, வால்பாறையில் சுற்றுலாத்தலங்கள் உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப்பயணியர் வந்து செல்கின்றனர்.
வால்பாறைக்கு பொள்ளாச்சியில் இருந்து செல்ல, முறையான ரோடு வசதிகள் இல்லாததால், சுற்றுலாப்பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வழித்தடம் மாறியது பொள்ளாச்சியில் இருந்து முதலில் வால்பாறைக்கு செல்ல, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு பயன்பாட்டில் இருந்தது. அங்கு வணிக வளாகங்கள் அதிகளவு அமைந்ததால், ரோடு குறுகலாக மாறியதால், இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் செல்கின்றன.
பஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால், வால்பாறைக்கு இவ்வழியாக செல்ல முடியாத நிலையில், தற்போது பொள்ளாச்சி ராஜாமில் ரோடு வழியாக சென்று, திருவள்ளுவர் திடல் வழியாக வால்பாறைக்கு செல்லும் நிலை உள்ளது.
அதே போன்று, பழநியில் இருந்து வருவோர், தேர்நிலையம், மரப்பேட்டை வீதி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இணைப்புச்சாலை அல்லது ஊத்துக்காடு ரோடு வழியாக சென்று, வால்பாறை ரோட்டுக்கு செல்கின்றனர்.
போதிய வழிகாட்டுதல் இல்லாமல் வரும் சுற்றுலாப்பயணியர் குழப்பத்துக்கு ஆளாகின்றனர்.மேலும், வால்பாறை செல்லும் பஸ்கள், ராஜாமில் ரோடு வழியாக செல்வதால் அவ்வப்போது எதிர், எதிரே வாகனங்கள் வரும் போது நெரிசல் ஏற்படுகிறது.
மரப்பேட்டை வீதியில் இருந்து கந்தசாமி பூங்கா செல்லும் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதுடன் குறுகலாக இருப்பதால், நெரிசலுக்கு பஞ்சமில்லை. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தான் காணப்படுகிறது.
எனவே, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, மாற்றுப்பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசிடம் வலியுறுத்தப்படும் பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை தலைவர் முத்துசாமி கூறியதாவது:
பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று, கிழக்கு புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடையும் போது, போக்குவரத்து நெரிசல் நகரில் குறைய வாய்ப்புள்ளது.
அதே போன்று, தெற்கு பகுதியான சமத்துார், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மாற்றுப்பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும்.
ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே செல்லும் ரோட்டை விரிவுப்படுத்தி, அவ்வழியாக பழநி, உடுமலையில் இருந்து சமத்துார், வால்பாறை செல்லும் வாகனங்களை செல்ல அனுமதிக்கலாம்.
அது போன்று கோவையில் இருந்து வால்பாறைக்கு செல்வோர், பல்லடம் ரோடு, கந்தசாமி பூங்கா வழியாக செல்கின்றனர்.இதற்கு மாற்றாக, பல்லடம் ரோட்டில் இருந்து நேரடியாக கந்தசாமி பூங்கா ரோடு வழியாக, வால்பாறை ரோட்டுக்கு செல்ல வழிவகை செய்யலாம்.
இதற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தி அரசு நடவடிக்கை எடுத்தால் பலன் கொடுக்கும்.
வால்பாறைக்கு சாலை அல்லது தெற்கு புறவழிச்சாலை என மாற்றுத்திட்டம் செயல்படுத்த, அரசுக்கு மனு கொடுத்து வலியுறுத்த தொழில் வர்த்தக சபை வாயிலாக முயற்சிகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.