/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் ரோடு, தார் சாலையானால் 'மகிழ்ச்சி' மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ரூ.200 கோடி ஒதுக்கீடு
/
மண் ரோடு, தார் சாலையானால் 'மகிழ்ச்சி' மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ரூ.200 கோடி ஒதுக்கீடு
மண் ரோடு, தார் சாலையானால் 'மகிழ்ச்சி' மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ரூ.200 கோடி ஒதுக்கீடு
மண் ரோடு, தார் சாலையானால் 'மகிழ்ச்சி' மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ரூ.200 கோடி ஒதுக்கீடு
ADDED : நவ 09, 2024 11:27 PM
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண் சாலைகளை, தார் ரோடாக மாற்றுவதற்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளில், 5,215 எண்ணிக்கையில், 860.69 கி.மீ., துாரத்துக்கு, 415.60 கோடி ரூபாயில் தார் ரோடு போடுவதற்கு திட்டமிடப்பட்டது. அதில், 4998 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதனால், 821 கி.மீ., துாரத்துக்கு தார் ரோடு போட, 329 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, 38.32 கி.மீ., துாரத்துக்கு, 214 பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும், குறுக்கு வீதிகளில் மண் சாலைகள் படுமோசமாக இருக்கின்றன. மழை பெய்யும் சமயங்களில் வீதிகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகிறது. வாகனங்களில் செல்லும் மக்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு அவதிப்படுகின்றனர்.
குறிச்சி, குனியமுத்துார் பகுதியில் கூட்டுக்குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான ரோடு தோண்டப்பட்டதால், படுமோசமாக இருக்கிறது. சமீபத்தில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் சில பகுதிகளுக்கு நேரில் சென்று, கள ஆய்வு செய்தார்.
இதையடுத்து, நுாலக அடிக்கல் நாட்டு விழாவில், முதல்வர் அறிவித்த ஆறு சிறப்பு திட்டங்களில் ஒன்றாக, சாலை சீரமைப்பு பணிக்காக, 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளார். ரோடுகளை தேர்வு செய்து, கருத்துரு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
அதனால், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு நேற்று நேரில் சென்றார். 16வது வார்டு இடையர்பாளையம், டி.வி.எஸ்., நகர், அன்னை அமிர்தா நகர், 17வது வார்டு இடையர்பாளையம் திருவேங்கடசாமி நகர், அரவிந்த் நகர், 27வது வார்டு பீளமேடு, பாரதி காலனி, கிரியம்மன் கோவில் வீதி, 95வது வார்டு போத்தனுார் சாய் நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
வார்டு வாரியாக ஆய்வு
முதல்வர் அறிவித்த சிறப்பு ரூ.200 கோடி பெறுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும். மோசமாக உள்ள மண் சாலைகள், கவுன்சிலர்கள் கூறும் இடங்கள், பொதுமக்கள் கோரிக்கை விடும் சாலைகளை கள ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் ரோட்டை தேர்வு செய்து சமர்ப்பிக்க, உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வார்டு வாரியாக வீதிகள் மற்றும் கி.மீ., பட்டியலிடப்பட்டு அரசுக்கு அனுப்பி, நிதி ஒதுக்கீடு பெறப்படும்.
--- சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி கமிஷனர், கோவை.