/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.ஆர்.ஓ., தலைமையில் ஸ்பெஷல் 'டீம்' அவசியம்
/
டி.ஆர்.ஓ., தலைமையில் ஸ்பெஷல் 'டீம்' அவசியம்
ADDED : டிச 25, 2024 08:23 PM
கோவை; கோவையில், 'மெட்ரோ ரயில்' திட்டம் செயல்படுத்த, 26 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்கு, டி.ஆர்.ஓ., தலைமையில் சிறப்பு குழு அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கோவையில் அவிநாசி ரோடு, சத்தி ரோடு என இரு வழித்தடங்களில், 34.8 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ ரயில்' பேஸ்-1 திட்டம் செயல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பியிருக்கிறது.
நீலாம்பூரில் எல் அண்டு டி பைபாஸ் அருகே 'டெப்போ', உக்கடத்தில் ஜங்சன், 32 இடங்களில் நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன. 'டெப்போ' அமைக்க மட்டும், 16 ஹெக்டேர், இரு வழித்தடங்களில் துாண்கள் அமைக்க, 10 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
ஒரு ஹெக்டேர் என்பது, 2.47 ஏக்கர். இதன்படி கணக்கிட்டால், 64.22 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். 30 மீட்டர் இடைவெளிக்கு ஒரு துாண் அமைக்க திட்டமிட்டு இருப்பதால், ஏராளமானோரிடம் நிலம் கையகப்படுத்த வேண்டும்.
சத்தி ரோட்டில், சாலை நடுவே மெட்ரோ வழித்தடம் அமைக்க ஆலோசித்திருப்பதால், அதிக அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படாது. அவிநாசி ரோட்டில் அண்ணாதுரை சிலை சந்திப்பில் இருந்து இடது புறம் வழித்தடம் உருவாக்கப்படுகிறது; வழிநெடுக வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதனால், ரோடு எல்லையில் இருந்து துாண் எழுப்ப ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டு, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கும் பணியை, 2025 மார்ச்சுக்குள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது; அதற்கான ஆயத்தப் பணி பிப்ரவரியில் துவக்கப்படுகிறது.
மொத்தம், 64.22 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பதால், தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகளில் இருப்பதைபோல், தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, டி.ஆர்.ஓ., தலைமையில் தாசில்தார்கள், சர்வேயர்கள் அடங்கிய 'ஸ்பெஷல் டீம்' நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.