/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முடீஸ் எஸ்டேட்டில் அணையாத தெருவிளக்கு
/
முடீஸ் எஸ்டேட்டில் அணையாத தெருவிளக்கு
ADDED : நவ 17, 2025 01:07 AM

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்திலும் எரியும் தெருவிளக்குகளால், மின் ஆற்றல் வீணாகிறது.
வால்பாறை மலைப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதால், நகராட்சி சார்பில் எஸ்டேட் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தெருவிளக்குகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், முடீஸ் மற்றும் சுற்று பகுதியில் நேற்று பகல் நேரத்தில் தெருவிளக்குகள் அணையாமல் எரிந்தது. புகார் தெரிவித்தும், மின்விளக்குகளை அணைக்க நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பண விரயமும், மின் ஆற்றலும் வீணானது.
தொழிலாளர்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் பெரும்பாலானவை இரவு நேரத்தில் எரிவதில்லை. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த முடீஸ் பகுதியில், தெருவிளக்குகளை கூட நகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை.
கடந்த இரண்டு நாட்களாக, முடீஸ் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் பகல் முழுவதும் தெருவிளக்குகள் எரிகின்றன. புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தெருவிளக்குகளை 'ஆன்' செய்வதற்கு 'எலக்ட்ரானிக் டைமர்' பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட கோளாறினால் பகல் நேரத்தில் தெருவிளக்கு எரிகிறது. 'டைமர்' மாற்றப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் தெருவிளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

