/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூங்காவில் விளையாடிய மாணவி காயம்
/
பூங்காவில் விளையாடிய மாணவி காயம்
ADDED : ஜன 04, 2024 12:01 AM

வால்பாறை: வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாடிய பள்ளி மாணவி காயமடைந்தால், பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர்.
வால்பாறை காமராஜ் நகர் பகுதியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவுக்கு செல்ல நுழைவு கட்டணமாக, 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த பூங்காவில் வாசத்திற்கு கூட மலர்கள் இல்லை என்றும், இங்குள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும், 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியிடப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை.
இந்நிலையில், வால்பாறை நகரை சேர்ந்த பள்ளி மாணவி தன்யா,11, என்பவர் குடும்பத்துடன் பூங்காவுக்கு சென்றனர். அப்போது மாணவி அங்குள்ள சுழலும் நாற்காலியில் அமர்ந்து விளையாடிய போது எதிர்பாராதவிதமாக, நாற்காலி உடைந்து மாணவியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, வால்பாறை போலீசில் மாணவியின் தந்தை சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, வால்பாறை போலீசார் நகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.