/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது கோவையில் 11 மணி நேரம் 'திக்... திக்...'
/
காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது கோவையில் 11 மணி நேரம் 'திக்... திக்...'
காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது கோவையில் 11 மணி நேரம் 'திக்... திக்...'
காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது கோவையில் 11 மணி நேரம் 'திக்... திக்...'
ADDED : ஜன 03, 2025 11:24 PM

கோவை:கொச்சியில் இருந்து காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது. இதனால் பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. காஸ் கசிவால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, மின்சார பணிகள் நிறுத்தப்பட்டன.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து 18 டன் காஸ் ஏற்றிய, 'ஜோதி எல்.பி.ஜி.,' என்ற டேங்கர் லாரி, கோவை கணபதி, எப்.சி., ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த லாரியை தென்காசி மாவட்டம், கடையநல்லுார், சிவராமபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 29, ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவை, அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் மேம்பால வளைவில், டிரைவர் டேங்கர் லாரியை திருப்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரியின், டேங்கர் இருக்கும் பகுதி இடது புறமாக சாய்ந்தது.
இதில், லாரியின் முன்பகுதியையும், டேங்கர் பகுதியையும் இணைக்கும், 'டேர்ன் பிளேட் பின்' உடைந்தது. இதனால், காஸ் நிரம்பிய டேங்கர் சாலையில் கவிழ்ந்தது.
காஸ் கசிவு
டேங்கரில் இருந்து அளவீடு மீட்டர் உடைந்து, அதன் வழியாக காஸ் கசிந்தது. பதறிப் போன டிரைவர் ராதாகிருஷ்ணன், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், காஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
கசிவு ஏற்பட்ட இடத்தில், 'சாப்ட் வுட்' எனப்படும் கட்டையை பயன்படுத்தி, துளையை ஓரளவு அடைத்தனர். பின், 'கோல்டு வெல்டிங்' வாயிலாக, 'பாஸ்ட் ஸ்டீல் எப்பாக்ஸி ஸ்டிக்' பயன்படுத்தி, கசிவு ஏற்பட்ட இடத்தை முற்றிலும் அடைத்தனர்.
காஸ் கசிவால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியை சுற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த வீடுகளில் தீப்பற்றும் விதமாக, எந்த வேலையும் செய்ய வேண்டாம் என, மாநகராட்சி சார்பில், 'மெகா போன்' வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. கவிழ்ந்து கிடந்த லாரியை, மூன்று கிரேன்கள் உதவியுடன் நிமிர்த்தினர்.
விபத்துக்குள்ளான லாரி, சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. டேங்கரை கொண்டு செல்ல, வேறு லாரி வந்தது.
காஸ் உள்ள டேங்கரையும், லாரியின் முன் பகுதியையும் இணைக்கும் பாகம் உடைந்திருந்ததால், புதிய டேர்ன் பிளேட் பின்னை எடுத்து வந்தனர். அதை டேங்கர் லாரியில் பொருத்தி, டேங்கரை லாரியின் முன்பகுதியுடன் இணைத்தனர்.
டேங்கரில் இருந்து கசிவு ஏற்படுகிறதா என, பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அதன் பின், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகன பாதுகாப்புடன், டேங்கர் லாரி கணபதியில் உள்ள, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
காஸ் கசிவால் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.