/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் எடுக்கும் இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு
/
குடிநீர் எடுக்கும் இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு
குடிநீர் எடுக்கும் இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு
குடிநீர் எடுக்கும் இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு
ADDED : மார் 14, 2024 11:10 PM

மேட்டுப்பாளையம்:தினமலர் செய்தியின் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம், சிறுமுகை அருகே மூளையூரில் குடிநீர் எடுக்கும் இடம், வீடுகளில் வைத்துள்ள குடிநீர், பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளை ஆய்வு செய்தது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளுக்கு சிறுமுகை அருகே மூளையூரில் பவானி ஆற்றில் கிணறு அமைத்து, அதிலிருந்து தண்ணீர் எடுத்து, சம்பரவள்ளியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது. அங்கிருந்து ஆறு ஊராட்சிகளுக்கும் குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது.
தற்போது பவானி ஆற்றில், நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால், ஏழு எருமை பள்ளத்தில் வரும் கழிவு நீர், சிறுமுகை நகரின் கழிவுநீர் ஆகியவை பவானி ஆற்றில் தண்ணீருடன் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை, 6 ஊராட்சிகளுக்கும் விநியோகம் செய்வதால், குடிநீரை மூன்று நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தால், அதில் புழு உருவாகிறது. தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு உடல் நலம் குறைவு ஏற்படுகிறது. எனவே இந்த ஊராட்சிகளுக்கு, திருப்பூர் குடிநீர் திட்டத்திலிருந்து, குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் என, ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக புகைப்படத்துடன் தினமலரில் நேற்று செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், தண்ணீர் எடுக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி) சுவேதா சுமன் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மீரா, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், சிறுமுகை அருகே மூளையூரில் பவானி ஆற்றில் தண்ணீர் எடுக்கும் இடத்தையும், சம்பரவள்ளியில் உள்ள, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தனர். வீடுகளில் பாத்திரங்களில் இருப்பு வைத்துள்ள தண்ணீரை வாங்கி முகர்ந்து பார்த்தனர். பின்பு பொது மக்களிடம், குடிநீர் சுவை எவ்வாறு உள்ளது என கேட்டறிந்தனர்.
பின்பு ஏழு எருமை பள்ளத்தில் வரும் கழிவு நீர், சிறுமுகை நகரின் கழிவு நீர் பவானி ஆற்றில் கலக்கும் பகுதி, ஆலாங்கொம்பில் கழிவுநீர் கலக்கும் பகுதி, மேட்டுப்பாளையம் நகரின் கழிவுநீர் கலக்கும் பகுதி ஆகிய இடங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார், இலுப்பநத்தம் ஊராட்சி தலைவர் ரங்கசாமி, இரும்பறை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பவானி ஆற்றில் மூளையூரில் தண்ணீர் எடுக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். உடனடியாக திருப்பூர் குடிநீர் திட்டத்திலிருந்து, ஆறு ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என, அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

