/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சிப்பொருளாக மாறிய உயர்கோபுர மின்விளக்கு
/
காட்சிப்பொருளாக மாறிய உயர்கோபுர மின்விளக்கு
ADDED : செப் 25, 2024 08:29 PM

வால்பாறை : உருளிக்கல் எஸ்டேட் பகுதியில், நான்கு மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு எரியாததால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் எஸ்டேட், செக்போஸ்ட் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கடந்த நான்கு மாதங்களாக எரியவில்லை. பல முறை புகார் தெரிவித்தும், நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தால், இந்தப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது: உருளிக்கல் எஸ்டேட் பகுதியில், யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி சார்பில் உருளிக்கல் செக்போஸ்ட் அருகே, உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
ஆனால், கடந்த நான்கு மாதங்களாக விளக்கு எரிவதில்லை. இதனால், இரவு 7:00 மணிக்கு மேல் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், உயர்கோபுர மின்விளக்கு எரியாததால், தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாமலும், வெளியிடங்களில் பணிபுரியும் மக்கள் வீடு திரும்ப முடியாமலும் தவிக்கின்றனர். நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மின்விளக்கை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.