ADDED : மார் 04, 2026 04:59 AM
போத்தனூர்: சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாலையின் முடிவில், மாந்தோப்பு பகுதி உள்ளது. இங்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், நடுநிலைப்பள்ளி, மருத்துவமனை உள்ளன. இதன் நடுவேயிருந்த ரயில்வே குடியிருப்பு பயன்பாடின்றி, சிறு காடு போல மரம், செடிகள் வளர்ந்துள்ளன. இதனை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுமார், 10:00 மணியளவில் விலங்கு ஒன்று, சர்ச் சாலையை கடந்து, காம்பவுண்ட் சுவர் மீது தாவி ஏறி, செடிகளுக்கிடையே குதித்தது. இதனை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பகிர்ந்த பலர், அவ்விலங்கு சிறுத்தை என குறிப்பிட்டதால், மக்களிடையே பீதி ஏற்பட்டது. தகவலறிந்த போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், வனத்துறையினர் சம்பவ இடத்தில் தேடியும் எந்த விலங்கும் தென்படவில்லை.
இதனிடையே வீடியோ எடுத்த நபரை தேடி பிடித்தனர். பதிவை முழுமையாக ஆய்வு செய்ததில், அவ்விலங்கு காட்டுப்பூனை என தெரிந்தது.
