/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ஜன்னல் வெறும் அலங்கார கூறு அல்ல
/
ஜன்னல் வெறும் அலங்கார கூறு அல்ல
UPDATED : டிச 27, 2025 08:46 AM
ADDED : டிச 27, 2025 05:24 AM

ஒரு வீட்டின் அழகையும், பயன்பாட்டையும் முதலில் வெளிப்படுத்துவது அதன் ஜன்னல்களும், வாசல்களும்தான். இவை வெறும் அலங்காரக் கூறுகள் அல்ல; வீட்டின் இயற்கை வெளிச்சம், காற்றோட்டம், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கிய கட்டுமான கூறுகள்.
பல வீடுகளில் ஜன்னல், வாசல்களின் இடம் மற்றும் அளவு கட்டுமானத்தின் கடைசி கட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. இதன் விளைவாக வெளிச்சம் குறைவு, காற்றோட்டம் இல்லாமை மற்றும் வெளியில் இருந்து நேரடிப்பார்வை போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.
கோவை மண்டல கட்டட பொறியாளர்(கொஜினா) சங்க செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் கூறியதாவது:
தவறான இடத்தில் அமைக்கப்பட்ட ஜன்னல்களால் வெளிச்சம் என்பது கேள்விக்குறியாகிறது. ஜன்னல்கள் மற்றும் வாசல்களை சுவர்களின் நடுப்பகுதியில் மட்டும் அல்ல; அறையின் பயன்பாடு மற்றும் கட்டடத்தின் திசை அடிப்படையில் திட்டமிட வேண்டும்.
சமையலறை, படுக்கையறை, கழிவறை போன்ற இடங்களில் ஜன்னல்களின் உயரம் மற்றும் திசை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிரெதிராக அமைக்கப்படும் ஜன்னல்கள் வாயிலாக குறுக்கு காற்றோட்டம் கிடைக்கும்போது, வீடு இயற்கையாகவே ஆரோக்கியமான சூழலாக மாறுகிறது.
தரைமட்ட ஜன்னல்கள் மற்றும் பக்க வாசல்களை, பாதுகாப்பு பார்வையில் கூடுதல் கவனத்துடன் வடிவமைக்க வேண்டும். தரமான கிரில், நம்பகமான 'லாக்கிங் சிஸ்டம்', குழந்தைகள் பாதுகாப்புக்கான தாழ்ப்பாள் ஆகியவை அவசியம். அழகிற்காக பாதுகாப்பை சமரசம் செய்வது எதிர்காலத்தில் பெரிய சிக்கல்களுக்கு காரணமாகலாம்.
ஜன்னல்கள், வெளியுலகத்துடன் வீட்டை இணைக்கும் பாலமாக செயல்படுகின்றன. ஆனால், நகர்ப்புறங்களில் அருகருகே கட்டடங்கள் அமைந்திருக்கும் நிலையில் தனியுரிமை மிக முக்கியமாகிறது. இன்றைய நகர்ப்புற கட்டுமானங்களில் அடுத்த வீட்டின் சுவர் மிக அருகில் இருக்கின்றன.
இச்சூழலில் ஜன்னல், வாசல் வடிவமைப்பு என்பது அழகுக்கானது மட்டும் அல்ல; பாதுகாப்பு தொடர்பானது தீர்வுகளை தருபவையும்கூட. வீட்டின் உள்ளே போதுமான வெளிச்சம், காற்றோட்டம், பாதுகாப்பு, தனியுரிமை ஆகியன இருந்தால்தான் அது உண்மையான கனவு இல்லமாக மாறும்.

