UPDATED : பிப் 18, 2026 06:27 AM
ADDED : பிப் 18, 2026 06:26 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இயங்கும், ஆதார் சேவை மையம், கடந்த ஒன்றரை மாதமாக செயல்படாமல் மூடியே உள்ளது.
பொதுமக்கள் ஆதார் எடுக்க வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. இங்கு புதிதாக ஆதார் எடுத்தல், ஆதாரில் திருத்தங்கள் செய்தல், குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.
தினமும் காலையிலிருந்து மாலை வரை செயல்பட்டு வந்தது. இதனால் மேட்டுப்பாளையம் தாலுகாவில் இருந்து தினமும், 50க்கும் மேற்பட்டவர்கள், இந்த மையத்திற்கு வந்து, புதிதாக ஆதார் அட்டை எடுத்தும், திருத்தங்கள் செய்தும் சென்றனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக, ஆதார் சேவை மையம் செயல்படாமல் மூடியே உள்ளது. தினமும் பொதுமக்கள் ஆதார் மையத்திற்கு வந்து, மூடி இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் கவிதாவிடம் கேட்டபோது, ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் நபரின் 'ஐடி', காலாவதி ஆனதால், புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகிறது. விரைவில் ஆதார் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
