ADDED : மே 16, 2026 07:55 AM

கோவை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆவின் மொபைல் செயலியின் (ஆப்) தொடர் குளறுபடிகளால், தங்களுக்கு வர வேண்டிய கமிஷன் தொகை கிடைக்காமல் பால் முகவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட பால் முகவர்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம், முன்அறிவிப்பு இன்றி ஆவின் புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் பால் அட்டை புதுப்பித்தல், பால் தேவையை பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பால் முகவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி கமிஷன் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான கமிஷன் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
பால் முகவர்கள் கூறுகையில், ''புதிய செயலி அறிமுகமான மார்ச் மாதத்தில் கமிஷன் தொகையில் 2 சதவீதம் பிடித்தம் செய்தனர். அந்த தொகையை பின்னர் திருப்பி தருவதாக தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை அந்த தொகையும் வழங்கப்படவில்லை. ஏப்ரல் மாத கமிஷனும் வரவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. டெபிட் கார்டு வசதி இல்லை; கிரெடிட் கார்டு வசதி மட்டுமே உள்ளது. தினமும் மாலை 6 மணிக்குள் அடுத்த நாளுக்கான பால் தேவையை செயலியில் பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். தவறினால், அடுத்த நாள் பால் வினியோகிக்க மாட்டார்கள். செயலியில் சரியாக பதிவாகாமல் போனால் செலுத்திய பணம் திரும்ப வர ஐந்து நாட்கள் வரை ஆகிறது,'' என்றனர்.
கோவை மாவட்ட பொறுப்பு மேலாளர் சண்முகம், “புதிய செயலியில் எவ்வித பிரச்னையும் இல்லை. நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் பரப்பும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனால், செயலி தொடர்பான புகார்கள் தொடர்ந்து வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதற்கு உரிய விளக்கமும் தீர்வும் கிடைக்காமல், கோவை ஆவின் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளால் பால் முகவர்களும் நுகர்வோர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
