/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவின் குளிரூட்டும் நிலையம்... 35 ஆண்டுக்கு பின் மூடுவிழா! பால் உற்பத்தியாளர்கள் சோகம்
/
ஆவின் குளிரூட்டும் நிலையம்... 35 ஆண்டுக்கு பின் மூடுவிழா! பால் உற்பத்தியாளர்கள் சோகம்
ஆவின் குளிரூட்டும் நிலையம்... 35 ஆண்டுக்கு பின் மூடுவிழா! பால் உற்பத்தியாளர்கள் சோகம்
ஆவின் குளிரூட்டும் நிலையம்... 35 ஆண்டுக்கு பின் மூடுவிழா! பால் உற்பத்தியாளர்கள் சோகம்
ADDED : ஜூன் 18, 2024 10:47 PM

அன்னுார்;அன்னுாரில் செயல்பட்டு வந்த ஆவின் பால் குளிரூட்டும் மையம் மூடப்பட்டது. 35 ஆண்டுகளாக இயங்கி வந்த மையம் மூடப்பட்டடதால் பால் உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு அன்னுார் அருகே அல்லிக்காரம் பாளையத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து கோவையில் உள்ள ஆவின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை பணம் வழங்கப்படுகிறது.
தற்போது சராசரியாக பசும்பாலுக்கு, ஒரு லிட்டருக்கு 36 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அல்லிக்காரம் பாளையத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பால் குளிரூட்டும் மையம் மூடப்பட்டு விட்டது. இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்த 1989ல் இந்த மையம் துவக்கப்பட்டது. 35 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது. ஒரு லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் திறன் கொண்டது. 70 ஆயிரம் லிட்டர் வரை பால் வரத்து இருந்தது. சில ஆண்டுகளாக ஆவினுக்கு படிப்படியாக பால் வரத்து குறைந்தது. மேலும் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி பால் குளிரூட்டும் மையங்கள் ஊத்துப் பாளையம் உள்ளிட்ட சில ஊர்களில் துவக்கப்பட்டது. இதனால் இந்த மையத்திற்கு பால் வரத்து மேலும் குறைந்தது. இதையடுத்து தற்போது மூடப்பட்டு உள்ளது.
இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டனர். எனினும் பால் கேன் கழுவும் பணி செய்தவர்கள், தினக்கூலி பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த மையம் கால்நடை தீவனம் இருப்பு வைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.35 ஆண்டுகளாக இயங்கி வந்த ஆவின் குளிரூட்டும் மையம் மூடப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகளுக்கு பாதிப்பு
போதுமான மழை இல்லாதது. விவசாய தொழிலாளர்கள் கிடைக்காதது. விளை பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை இல்லாதது ஆகிய காரணங்களால் விவசாயத்தில் நிலையான நிரந்தர வருமானம் இல்லை.
கறவை மாடு வளர்ப்பு தான் நிலையான நிரந்தர வருமானம் தருகிறது. இந்நிலையில் ஆவின் மூடப்பட்டது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்.