/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கக்கட்டி கொடுத்து 4 பவுன் நகைகள் அபேஸ்
/
தங்கக்கட்டி கொடுத்து 4 பவுன் நகைகள் அபேஸ்
ADDED : ஆக 05, 2025 11:58 PM
கோவை; கோவை சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணி செய்கிறார். சின்னவேடம்பட்டியில், காஸ் ஸ்டவ் உதரி பாகங்கள், சர்வீஸ் கடையும் வைத்துள்ளார். இவர் மனைவி, காயத்ரி, 29 கடையை கவனித்து வருகிறார்.
கடந்த மாதம் கடைக்கு வந்த, 50 வயது பெண் ஒருவர் கடையில், பொருட்கள் வாங்குவது போல் காயத்ரியிடம் பழகினார். அப்பெண் தனது சொந்த ஊர் மைசூர் எனவும், மழை நீர் வடிகால், மற்றும் சாக்கடையில் இருந்து சேகரிக்கும் தங்கத் துகள்களை, தங்கக்கட்டியாக்கி விற்பதாகவும் கூறினார்.
தான் கொடுக்கும் தங்க கட்டியை வெளியில் விற்று, சிறிய லாபம் கொடுத்தால் போதும் எனக் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் கடைக்கு வந்த அப்பெண், காயத்ரியிடம் தங்க கட்டி என, 9 செ.மீ., நீளம், ஆறு செ.மீ., அகலம் உடைய கட்டியை கொடுத்துள்ளார்.
அதை காயத்ரி, தங்கம் என நினைத்து வாங்கினார். அதன் பின் அப்பெண், தங்க கட்டியை விற்று பணம் தரும் வரை, காயத்ரியின் 3 பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம் தன்னிடம் இருக்கட்டும் என, வாங்கிச் சென்றார்.
அதன் பின் வரவில்லை. இந்நிலையில் வீட்டுக்கு வந்த ராம்குமாரிடம் நடந்தவற்றை கூறிய காயத்ரி, தங்கக்கட்டியை காட்டினார்.
அக்கட்டியை வாங்கிப்பார்த்த ராம்குமார் சந்தேகமடைந்து, அருகிலுள்ள அடகு நகை கடையில் சோதனை செய்தார். அது போலி என தெரிந்தது.
காயத்ரி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.