/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலாம்பூர் சந்திப்பில் விபத்து அபாயம்
/
நீலாம்பூர் சந்திப்பில் விபத்து அபாயம்
ADDED : நவ 27, 2025 05:27 AM

கோவை: உப்பிலிபாளையத்தில் துவங்கும் அவிநாசி ரோடு, நீலாம்பூரை கடந்து சேலம் - கொச்சின் பைபாஸில் இணைகிறது. இவ்வழித்தடத்தில், நீலாம்பூர் பைபாஸ் மிகவும் முக்கியமானது. வெள்ளானைப்பட்டி ரோடு, சீரபாளையம் ரோட்டில் வரும் வாகனங்கள், நீலாம்பூர் சந்திப்பு வழியாக பைபாஸ் செல்கின்றன. அல்லது அவிநாசி ரோட்டை வந்தடைந்து, கோவை நகர்ப்பகுதிக்குள் நுழைகின்றன.
வெள்ளானைப்பட்டியில் கல்லுாரி வாகனங்கள் பல கடந்து செல்கின்றன. செட்டிபாளையம் நோக்கி செல்லும் பைபாஸில் உள்ள கல்லுாரிக்குச் செல்லும் வாகனங்களும், நீலாம்பூர் சந்திப்பை கடந்து செல்கின்றன. இவை தவிர, இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், லாரிகளும் இவ்வழியில் செல்வதால், நீலாம்பூர் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
வெள்ளானைப்பட்டி ரோட்டில் வரும் வாகனங்களும், அவிநாசி ரோட்டில் வரும் வாகனங்களும், சேலம் பைபாஸில் இருந்து வரும் வாகனங்களும், இச்சந்திப்பில் சந்தித்துக் கொள்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
பீக் ஹவர்ஸில் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக வருவதால், கிடைக்கும் வழியில் வாகன ஓட்டிகள் நுழைந்து செல்கின்றனர். இதன் காரணமாகவும் போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது.
வெள்ளானைப்பட்டி ரோட்டில் இருந்து, வாகனங்கள் வேகமாக வந்து அவிநாசி ரோட்டில் இணைவதால் விபத்து அபாயம் இருக்கிறது. இதற்கு தீர்வு காண, நீலாம்பூர் சந்திப்பில் பரீட்சார்த்த முறையில் மையத்தடுப்பு கற்கள் வைத்து அடைத்து விட்டு, 200 மீட்டர் துாரத்தில் 'யூ டேர்ன்' வசதி செய்ய வேண்டும்.
அல்லது பை பாஸ் பாலத்துக்கு கீழ் சென்று வரும் வகையில் போக்குவரத்தை மாற்றியமைத்தால், நீலாம்பூர் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி, வாகனங்கள் தேக்கம், விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர், போக்குவரத்து போலீசார் இணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.

