/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம்; இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
/
நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம்; இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம்; இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம்; இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 12:42 AM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில் தனியார் பெட்ரோல் பங்க் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோட்டில், சிறிய அளவிலான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி --- கோவை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு பகுதியில், தனியார் பெட்ரோல் பங்க் சார்பில், 124 மீட்டருக்கு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 54 மீட்டர் ரோடு, 5.5 அடி அகலத்திலும், மீதம் உள்ள 70 மீட்டர் ரோடு, அகலம் குறைவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் தேசிய நெடுஞ்சாலை விதிப்படி ஹாலோபிளாக் கற்கள் வாயிலாக, 8 இன்ச் உயரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்புகள் இடைவெளியில் ஒளிபிரதிபலிக்கும் போர்டுகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
மக்கள் கூறியதாவது:
முதலில் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் இருந்து மேம்பாலம் ஏறும் இடத்தை தடுப்பு வைத்து அடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. அரசம்பாளையம் ரோடு இணைப்பில் தடுப்பு அமைக்காமல், தனியார் பெட்ரோல் பங்க் சார்பில் சர்வீஸ் ரோடு புதிதாக அமைத்து, அதில், மேம்பாலம் இணைப்பு சாலையில் எந்தவித பாதிப்பும் இன்றி பணி மேற்கொள்ளலாம், என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த சர்வீஸ் ரோட்டோரம் அமைக்கப்படும் தடுப்புகள், 8 இன்ச் உயரம் மட்டுமே அமைக்கப்படுகிறது. ஹாலோபிளாக் கற்கள் வைத்து சிறிய அளவில் தடுப்புகள் அமைப்பதால், இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல், விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்புள்ளது.
உயரமான இரும்பு தடுப்புகளில் வாகனங்கள் மோதி, அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், 8 இன்ச் தடுப்பு எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும். வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகாத வகையில், புதிதாக அமைத்த சர்வீஸ் ரோட்டின் ஓரத்திலும் இரும்பு தடுப்பு அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.