
அன்னூர் சாலையின் ஓரத்தில், மரங்களின் வேர்களும், மண்ணும்கிடப்பதால், விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சாலையோரம் வெட்டப்பட்ட மரத்தின் வேர்களால்
அப்புறப்படுத்த வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம், ஏப். 21--
மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை உள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைக்கு சமமான அளவில் உள்ளது. கோடை சீசன் துவங்கிய நிலையில், வெளியூர்களிலிருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இரு வழிச்சாலையாக இருப்பதால், இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போக்குவதற்காக, இரு வழி சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற, தமிழக அரசு அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை, சாலையின் இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. முதல் கட்டமாக, இந்த மரங்களை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராட்சத மரங்களை பொக்லைன் மற்றும் எலக்ட்ரிக் ரம்பம் ஆகியவற்றை கொண்டு, வெட்டும் பணிகள் நடைபெறுகின்றன. மரங்களை வேரோடு தோண்டும் பொழுது, சாலையில் பாதி அளவுக்கு மேல், மண்ணை குவிக்கின்றனர். மரங்களை வெட்டி எடுத்த பின், வேர்களை சாலையின் ஓரத்திலேயே போட்டு செல்கின்றனர். குவித்த மண்ணை ஓரளவு மட்டுமே அகற்றுகின்றனர். மீதமுள்ள மண்ணை சாலையிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் மழைக்காலத்தில் இவ்வழியாக செல்லும், இருசக்கர வாகனங்கள் சகதியில் சறுக்கி விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களின் வேர்களால், வாகன ஓட்டுனர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மரங்களை வெட்டுபவர்கள் சாலையில் எவ்வித மண்ணும், மரத்தின் கிளைகள் இல்லாத வகையில் சுத்தமாக, அப்புறப்படுத்த வேண்டும். மேலும் மர வேர்களை உடனுக்குடன் எடுத்துச் செல்ல வேண்டும். அல்லது சாலையின் ஓரத்தில் தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் கூறி மண்ணையும், மரத்தின் வேர்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரஜினிகாந்திடம் கேட்டபோது, மரங்களை வெட்டும் ஒப்பந்ததாரரிடம், மண்ணை சுத்தமாக சாலையிலிருந்து அப்புறப்படுத்தவும், மரத்தின் வேர்களை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும். முடியாத நிலையில் ஓரமாக தள்ளி வைக்க அறிவுரை வழங்கப்படும், என்றார்.

