/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரம் இல்லாத குட்டை அமைத்த ஊராட்சி மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
/
தரம் இல்லாத குட்டை அமைத்த ஊராட்சி மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
தரம் இல்லாத குட்டை அமைத்த ஊராட்சி மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
தரம் இல்லாத குட்டை அமைத்த ஊராட்சி மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 06, 2024 11:42 PM

மேட்டுப்பாளையம்; புதிதாக ஆறு லட்சம் ரூபாய் செலவில் அமைத்த குட்டை, ஒரு மாதமே ஆன நிலையில், கனமழையால் குட்டையின் கரை உடைந்தது. தரம் இல்லாத குட்டை அமைத்த ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாசம்பாளையத்தில், நெல்லிமலை அடிவாரத்தில், 50 மீட்டர் இடைவெளியில் இரண்டு தடுப்பணைகள் உள்ளன.
இதில் தேங்கி நிற்கும் தண்ணீரால், சுற்றுப்பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு நீரூற்று கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஊராட்சியின் சார்பில், இரண்டு தடுப்பணைகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில், 6 லட்சம் ரூபாய் செலவில், ஒரு மாதம் முன் புதிதாக குட்டை அமைக்கப்பட்டது. ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், தடுப்பணையில் இருந்து வெளியேறிய தண்ணீர், குட்டையின் கரையை உடைத்துக்கொண்டு வெளியேறியது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
நெல்லிமலைப் பகுதியில் இருந்து வரும் மழை நீர், இந்த குட்டைக்கு செல்ல எவ்வித வழிப்பாதையும் அமைக்கவில்லை. நான்கு பக்கமும் மண்ணை கொட்டி கரையை உயர்த்தி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், குட்டையின் மேல் பகுதியில் உள்ள, தடுப்பணை நிறைந்து வெளியேறிய தண்ணீர், குட்டையின் கரையை உடைத்து சென்றது. ஊராட்சி நிர்வாகம், தரம் இல்லாத குட்டையை கட்டியுள்ளது. இதனால் ஊராட்சிக்கு, 6 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் குட்டைக்கு மழைநீர் செல்ல வழி அமைக்காததால், மழை நீர் அனைத்தும் அருகே உள்ள விவசாய நிலத்தில் புகுந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், புதிதாக கட்டிய குட்டையை ஆய்வு செய்து, குட்டைக்கு மழைநீர் செல்லும் வகையில் வழி அமைக்கவும், தரம் இல்லாத குட்டையை அமைத்த ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.