ADDED : ஏப் 03, 2026 10:32 PM
கோவை: புட் பேட்ரோல் போலீசார், அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் பொருத்திய வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் ஸ்டைல், பேஷன் என்ற பெயரில் வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலென்சர்களை மாற்றிக்கொள்கின்றனர். இவ்வாகனங்கள் சாலையின் வரும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, பதற்றமாகி விபத்துக்களிலும் சிக்குகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில், வாகனங்களில் விதிமுறை மீறி மாற்றங்கள் செய்து இருப்பின் உடனடியாக போலீசார் 1000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்; சைலென்சர் பறிமுதல் செய்யப்படுகிறது.
போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறுகையில், '' அதிக சத்தம் எழுப்பும் வகையில் சைலென்சர் வாகனங்களில் பொருத்தக்கூடாது. சாலையில் வேகமாக செல்லும் போது இடைமறித்து நிறுத்துவது, துரத்துவது என்று இல்லாமல், அடுத்தடுத்த சிக்னல்களுக்கு தகவல் தெரிவித்து போக்குவரத்து நெரிசல் உருவாக்கி பிடிக்கின்றோம்.
துரத்துவதால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, புட் பேட்ரோல் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இதுவரை, 300க்கும் மேற்பட்ட சைலென்சர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
