/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மேவாட்' கொள்ளையர் மீதான அதிரடி மிகச்சிறந்த பாடம்; முன்னாள் டி.ஜி.பி.,
/
'மேவாட்' கொள்ளையர் மீதான அதிரடி மிகச்சிறந்த பாடம்; முன்னாள் டி.ஜி.பி.,
'மேவாட்' கொள்ளையர் மீதான அதிரடி மிகச்சிறந்த பாடம்; முன்னாள் டி.ஜி.பி.,
'மேவாட்' கொள்ளையர் மீதான அதிரடி மிகச்சிறந்த பாடம்; முன்னாள் டி.ஜி.பி.,
UPDATED : அக் 01, 2024 02:15 PM
ADDED : அக் 01, 2024 05:49 AM

கேரளாவில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு, கன்டெய்னரில் தப்ப முயன்ற, 'மேவாட்' கொள்ளையரை, நாமக்கல்லில் தமிழக போலீசார் என்கவுன்டர் செய்து, வளைத்துப் பிடித்தது, தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட் கூறியதாவது:
'மேவாட்' கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் என்கவுன்டர் செய்து பிடித்தது, கடந்த, 35 ஆண்டு கால தமிழக போலீஸ் வரலாற்றில் சிறப்பான சம்பவம்.
நாமக்கல் போலீசார் துரிதமாக செயல்பட்டது தான் வெற்றிக்குக் காரணம். திருச்சூர் போலீசார், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தருகின்றனர். உடனடியாக, எஸ்.பி., சரியான போலீஸ் 'டீமை' அனுப்பி வைக்கிறார். இதுபோன்ற துரிதமான, 'ஆக் ஷன்' அரிதான ஒன்று. தமிழக போலீசார் தாங்கள், 'நம்பர் ஒன்' என்பதை நிரூபித்துள்ளனர்.
போலீசின் இந்த நடவடிக்கையில் அபாயம் அதிகம். முன்பு, 'பவாரியா' கொள்ளையர்களைப் பிடித்து விசாரிக்கையில், தமிழக போலீசாரிடம் துப்பாக்கி இருக்காது என்பதால், துணிச்சலாக திருடுவதாகவும், தடுத்தால் தாக்குதல் நடத்தி தப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
தற்போது, தகவல் கிடைத்ததும் துரிதமாக முடிவெடுத்து, திறமையான குழுவை எஸ்.பி., அனுப்பியுள்ளார். இன்ஸ்பெக்டரிடம் துப்பாக்கி இருந்ததும், அதை முறையாக பிரயோகிக்க தெரிந்திருந்ததும் முக்கியம். துப்பாக்கி இல்லாவிட்டாலோ, அதை சரியாக பயன்படுத்தியிருக்கா விட்டாலோ தோல்வி நிச்சயம்.
உளவியல் ரீதியாக சரியாக சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம். இந்த போலீஸ் குழுவுக்கு, ஜனாதிபதியின் வீரதீரச் செயல்களுக்கான விருது கிடைக்கும். இந்த ஒரு என்கவுன்டரால், பிற மாநில கொள்ளையர் தமிழகத்துக்கு வர யோசிப்பர். 2005-06 காலகட்டங்களில், பவாரியா கொள்ளையர்களைப் பிடித்த பின், அவர்கள் இங்கு வருவதில்லை.
குற்றங்களின் தலைநகர்
ஹரியானா, உ.பி., ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில், ஏ.டி.எம்., கொள்ளை சர்வ சாதாரணம். ஏ.டி.எம்., இயந்திரத்தையே வெட்டி எடுத்துச் சென்று விடுவர்.
ஹரியானா மாநிலம், பல்வால் மாவட்டம் குற்றச் சம்பவங்களின் மையப்பகுதி. பவாரியா கொள்ளையர்களும் இங்கிருந்து தான் செயல்பட்டு வந்தனர். மேவாட் கொள்ளையர்களும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். முன்பு, சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள், மக்கள் சற்று விழிப்புணர்வு அடைந்ததால், ஏ.டி.எம்., கொள்ளையில் இறங்கியுள்ளனர்.
ராஜஸ்தான், உ.பி., ஹரியானா, பஞ்சாப், டில்லி என மாறி மாறிச் சென்று கொள்ளையடித்து விட்டு வந்துவிடுவர். போலீசாரும் தங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேடுவர் என்பதால், எளிதில் சிக்காமல் இருந்து வந்தனர். ஆனால், தமிழகத்தில் அது நடக்கவில்லை. இனி, மேவாட் கொள்ளையர்கள் மட்டுமல்ல வடமாநிலத்தில் இருந்து எந்த கொள்ளைக் கும்பலும் தமிழகத்துக்கு வரமாட்டார்கள். அதேநேரம், கேரள போலீசார், ஜ.ஜி., அளவில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, வடமாநிலத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு, பிற மாநில போலீசாருடன் இணைந்து ஏ.டி.எம்., குற்றச்செயல்கள், அதில் ஈடுபட்டவர்கள் என எல்லாவற்றையும் தொகுக்க வேண்டும்.
கன்டெய்னர் லாரி, அதற்குள் கார் என, திட்டமிட்டுச் செயல்பட, ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்க வேண்டும். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வளைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.