/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் நடமாட்டம் பற்றி வந்த 400 புகார்கள் மீது நடவடிக்கை!
/
போதைப்பொருள் நடமாட்டம் பற்றி வந்த 400 புகார்கள் மீது நடவடிக்கை!
போதைப்பொருள் நடமாட்டம் பற்றி வந்த 400 புகார்கள் மீது நடவடிக்கை!
போதைப்பொருள் நடமாட்டம் பற்றி வந்த 400 புகார்கள் மீது நடவடிக்கை!
UPDATED : ஆக 13, 2025 06:41 AM
ADDED : ஆக 12, 2025 09:30 PM

கோவை: போதைப்பொருட்கள் குறித்த புகார்களை தெரிவிக்க உருவாக்கப்பட்ட, 'டிரக் பிரீ டி.என்.,' எனும் செயலி வாயிலாக மூன்று மாதங்களில், 400 புகார்கள் வரை பெறப்பட்டுள்ளன; 12 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு, அதிகளவில் அடிமையாகி வருகின்றனர்.
மாணவர்களை குறிவைத்து கஞ்சா, மெத்தாபீட்டமைன், ஓப்பியம், கஞ்சா ஆயில் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் விற்பனையில், கடத்தல் பேர்வழிகள் ஈடுபடுகின்றனர். கோவை மாநகர போலீசார் கடந்த ஏழு மாதங்களில், போதைப்பொருட்கள் குறித்து, 175 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் எம்.டி.எம்., 48 கிராம், போதை மாத்திரைகள், 11 ஆயிரம், கொகைன், 92 கிராம் என, உயர்ரக போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்குகளில், 41 பைக்குகள், 10 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க, அனைத்து தரப்பினரும் புகார் தெரிவிக்க வசதியாக, போலீஸ் சார்பில், 'டிரக் பிரீ டி.என்.,' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் போதைப் பொருட்கள் விற்பனை, நடமாட்டம் குறித்து, யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். புகார்தாரரின் விபரம் வெளியே தெரியாது.
மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில், ''டிரக் பிரீ டி.என்., செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பின், பலரும் புகார் அளிக்க முன்வருகின்றனர். புகார் பெற்ற பின், அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 400 புகார்கள் வந்துள்ளன. 60 புகார்கள் நடவடிக்கை எடுக்க உகந்ததாக இருந்துள்ளது. இதன் அடிப்படையில், 12 வழக்குகள் பதியப்பட்டுள்ளன,'' என்றார்.