/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல் காக்க திரண்டு வந்த ஆர்வலர்கள்
/
சுற்றுச்சூழல் காக்க திரண்டு வந்த ஆர்வலர்கள்
ADDED : ஜூன் 30, 2025 12:17 AM

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'பசுமை சைக்கிளத்தான்' விழிப்புணர்வு பேரணி, கோவையில் நேற்று நடந்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
காலை 7:15 மணிக்கு, பாலசுந்தரம் சாலை, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அருகே, விழிப்புணர்வு பேரணியை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார்.
முன்னதாக நடந்த துவக்க நிகழ்ச்சியில், நேரு கல்விக்குழும முதன்மை செயல் இயக்குனர் கிருஷ்ணகுமார் பேசுகையில், ''சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலான இந்த விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு, தீங்கில்லாமல் விட்டுச் செல்ல வேண்டும் என்ற அறிவுரையை ஏற்படுத்தியிருக்கிறது,'' என்றார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் சதீஷ்குமார் பேசுகையில், ''இன்றைய காலகட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு, இதுபோன்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்,'' என்றார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே துவங்கிய பேரணி, அண்ணா சிலை சிக்னல், அவிநாசி சாலை, பிஷப் அப்பாசாமி கல்லுாரி சாலை, தாஜ் விவாந்தா ஓட்டல் சாலை, சாரதாம்பாள் கோவில் சாலை வழியாக, தாமஸ் பார்க் மீடியா டவரை அடைந்தது.
சான்றிதழ், பரிசு
தேசிய சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, பசுமை சைக்கிளத்தானில் பங்கேற்ற, கோவையை சேர்ந்த சவுபர்னிகா, ரமணி, பிரனேஷ், ஸ்மருதி ஆகியோருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், நினைவுப் பரிசு வழங்கினார். இதில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோருக்கு, சான்றிதழ், பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
போக்குவரத்து உதவி கமிஷனர் திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் முருகேசன், ரேஸ்கோர்ஸ் போலீசார், பசுமை சைக்கிளத்தான் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடக்க உதவினர்.